×

ஆசியான் நாடுகளின் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘இந்தியா எழுப்பிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால், ஆசியான் நாடுகளின் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் மத்திய அரசு இணையாது’’ என்று தாய்லாந்தில் பிரதமர் மோடி அறிவித்தார். ஆசியான் மாநாடு, கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றார். 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டது. இந்த 16 நாடுகளில் மொத்தம் 3.6 பில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் பாதி அளவு. இதனால் பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தம் செய்யலாம் என ஆசியான் தலைவர்கள் கடந்த 2012ம் ஆண்டே இதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கினர். நவீன, விரிவான, உயர் தர மற்றும் உறுப்பு நாடுகள் பயன்பெறும் வகையில் ஒப்பந்தம் போட முடிவு செய்யப்பட்டது. இதில் இந்தியா கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் சிறு வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்படும், இந்திய பொருளாதாரத்துக்கு மரண அடி ஏற்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்களும் நேற்று டெல்லியில் கூடி ஆலோசித்தனர். இந்நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நேற்று நடந்த பொருளாதார மாநாட்டில், பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில்(ஆர்சிஇபி) இடம் பெற்ற அம்சங்கள் குறித்து 16 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஒப்பந்தத்தால் அனைத்து உறுப்பு நாடுகளும் பயன்பெற வேண்டும், ஏழைகளின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், இந்தியாவின் சேவை துறைகளுக்கு சந்தை வாய்ப்பு ஆகியவைதான் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால், இதில் இடம் பெற்ற பெரும்பாலான அம்சங்கள் சீனாவுக்கு சாதகமாகவே இருந்தன. இந்தியா தெரிவித்த பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணப்படவில்லை.சீனாவின் மலிவு விலை வேளாண் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் அதிகளவில் இறக்குமதி ஆகும் விதத்தில் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்ற அம்சங்கள் இருந்தன. இதனால் இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:ஏற்கனவே ஒப்புக்கொண்ட விதிமுறைகளின் படி தற்போதைய ஆர்சிஇபி ஒப்பந்தம் இல்லை. இந்தியா எழுப்பிய பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வாய்ப்பில்லை. சர்வதேச விதிமுறைகள் படி தடையில்லா வர்த்தகம் இருக்க வேண்டும் என்பதுதான் இந்தியா விரும்புகிறது. ஆசிஇபி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இந்தியா ஆக்கப்பூர்வமாகவும், சாதகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் செயல்பட்டது. கொடுக்கல், வாங்கல் என்ற கொள்கை அடிப்படையில் சமநிலையுடன் இந்த ஒப்பந்தம் இருக்க வேண்டும் என இந்தியா பணியாற்றியது. கடந்த 7 ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தையில், உலக பொருளாதார மற்றும் வர்த்தக சூழல் மாறிவிட்டன. இந்த மாற்றங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்தியர்களின் நலன் கருதி, இந்த ஒப்பந்தத்தை மதிப்பிடும்போது, எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதனால் இந்த ஒப்பந்தத்தில் இணைய எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மாநாட்டுக்கு இடையே பிரதமர் மோடியும்,  ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது  இந்தோ-பசிபிக்  பகுதியில் சீனா ராணுவத்தையும், பொருளாதாரத்தையும் வேகமாக விரிவுபடுத்தி  வருவது உட்பட பல விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.Tags : India ,Modi ,ASEAN , ASEAN countries, economic, PM Modi
× RELATED தூய்மை இந்தியா குறித்து நாட்டின்...