×

இம்ரான் ராஜினாமா கெடு முடிவு அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை: போராட்ட குழு தலைவர் அதிரடி

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராஜினாமா செய்வதற்கான 2 நாள் காலக்கெடு முடிந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை போராட்டக் குழு தலைவர் நேற்று கூட்டினார். பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றபின் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என ஜமியத் உலமா-இ-இஸ்லாம் பசல் என்ற அமைப்பின் மதகுருவும், அரசியல்வாதியுமான மவுலானா பசலூர் ரகுமான் என்பவர் விடுதலை ேபரணியை நடத்தினார். இதனால் நாடு முழுவதிலிருந்தும் புறப்பட்ட அவரது ஆதரவாளர்கள் கடந்த 2ம் தேதி இஸ்லாமாபாத்தில் குவிந்தனர். இந்த பேரணிக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி) போன்ற முக்கிய கட்சிகள் உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இம்ரான்கான் பதவி விலக மவுலானா பசலூர் ரகுமான் 2 நாள் கெடு விதித்திருந்தார்.

அந்த கெடு முடிந்ததால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அவர் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். குறுகிய காலத்தில் விடுக்கப்பட்ட அழைப்பு என்பதால், இதில் பிபிபி தலைவர் பிலாவல் பூட்டோ, நவாஸ் கட்சி தலைவர் செபாஸ் ஷரிப் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என கூறப்பட்டது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை நிராகரித்த இம்ரான் கான் கூறுகையில், ‘‘ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள நவாஸ் கட்சி தலைவர்கள், பிபிபி கட்சி தலைவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சியாகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. இவர்களுக்கு நான் ஒரு போதும் சலுகை அளிக்க மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார். பிரதமரின் உதவியாளர் பிர்தோஸ் கூறுகையில், ‘‘பிரதமரின் ராஜினாமா தவிர அனைத்து கோரிக்கைகளை சந்திக்க இம்ரான் அரசு தயாராக உள்ளது’’ என்றார். விடுதலை பேரணியை முன்னிட்டு தலைநகர் இஸ்லாமபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மற்றும் தூதரக அதிகாரிகள் குடியிருப்பை சுற்றி 700 வீரர்கள் ‘சிவப்பு மண்டலம்’ பகுதியாக அறிவித்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Imran ,meeting ,Team Leader , Imran's ,resignation , bad decision,Leader Action
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு