×

தியோதர் கோப்பை இந்தியா பி புதிய சாம்பியன்

ராஞ்சி: தியோதர்  கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பி  அணி 51 ரன் வித்தியாசத்தில்  நடப்பு சாம்பியன் இந்தியா சி அணியை வீழ்த்தி புதிய சாம்பியனாக முத்திரை பதித்தது.தியோதர் கோப்பை 47வது தொடரில்  இந்தியா ஏ, பி, சி அணிகள் களமிறங்கின. லீக் சுற்றில் இந்தியா ஏ 2 போட்டியிலும் தோற்று வெளியேறியது. இந்தியா சி 2 வெற்றி, இந்தியா பி ஒரு வெற்றியுடன் முதல் 2 இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறின.ராஞ்சியில் நேற்று நடைபெற்ற பைனலில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் (0), கேப்டன் பார்திவ் பட்டேல் (14) சொற்ப ரன்னில் வெளியேற, பாபா அபராஜித் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 54 ரன் (79 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கேதார் ஜாதவ் 86 ரன் (94 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), விஜய் சங்கர் 45 ரன் (33 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

50 ஓவர் முடிவில் இந்தியா பி 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்தது. கிருஷ்ணாப்பா கவுதம் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர் விளாசி 35 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சி அணியின்  இஷான் போரல் அசத்தலாக 5 விக்கெட்,  ஜலஜ் சக்சேனா,  அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இதைத் தொடர்ந்து, 284 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஷுப்மான் கில் தலைமையிலான இந்தியா சி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கில் 1 ரன்னில் வெளியேற, மயாங்க் அகர்வால் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் (3 ரன்) உட்பட மற்றவர்கள்  வந்த வேகத்தில் ஒற்றை இலக்கில் வெளியேற ஆட்டம் சீக்கிரம் முடிந்து விடும் சூழல் ஏற்பட்டது. ஆனால், 3 வது ஓவரில் களமிறங்கி 30வது ஓவர் வரை தாக்குப்பிடித்த  பிரியம் கார்க் 74 ரன் (77 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். அக்சர் பட்டேல் 38 ரன், மயாங்க் மார்கண்டே 27 ரன் எடுத்து வெளியேறினர்.  ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்சேனா கடைசி ஓவர் வரை வரை போராடி ஆட்டமிழக்காமல் 33 ரன், இஷான் பொரேல் 5 ரன் எடுத்தனர். இந்தியா சி அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன் மட்டுமே எடுத்தது. 51 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா பி அணி தியோதர் கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் ஷாபாஸ் நதீம் 4, முகமது சிராஜ் 2, ரூஷ் களரியா 1 விக்கெட் வீழ்த்தினர்.



Tags : Deodar Cup India B ,Theodore Cup India B , Theodore Cup, India B, new champion
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு