×

திருச்சி வங்கி கொள்ளை சென்னை, பெங்களூருவில் 1 கிலோ தங்கம் மீட்பு

திருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் சென்னை, பெங்களூருவில் புதைத்து வைத்த 1 கிலோ தங்கத்தை கொள்ளையன் சுரேஷ் தகவலின்படி போலீசார் மீட்டனர். காவல் விசாரணை முடிவதால் அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகடையில் கடந்த மாதம் 2ம் தேதி சுவரில் துளையிட்டு புகுந்த மர்மநபர்கள் 13 கோடி மதிப்பு தங்கம், வைரம் மற்றும் பிளாட்டின நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக, சுரேஷ், கணேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி, மணிகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்த கொள்ளையர் தலைவன் முருகனை காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழகம் அழைத்து வந்து திருவெறும்பூர் காவிரிகரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். அந்த நகைகள் பெங்களூரு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முருகனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சுரேஷையும் திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் சிறையிலடைத்தனர். இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 457 பவுன் நகை, 19 லட்சம் கொள்ளை வழக்கு தொடர்பாக நம்பர் 1 டோல்கேட் போலீசார் சுரேஷை கடந்த 23ம்தேதி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் எந்த தகவலும் கிடைக்காததால் மீண்டும் 2வது முறையாக கடந்த 30ம் தேதி 7 நாள்காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.  அதில், வங்கியில் கொள்ளையடித்த நகைகளை சுரேஷ் சென்னை மற்றும் பெங்களூரில் புதைத்து வைத்திருந்ததாக கூறினார். இதையடுத்து அவரை அந்த இடங்களுக்கு அழைத்து சென்ற போலீசார் சுரேஷ் புதைத்து வைத்திருந்த 1 கிலோ தங்க நகைகளை மீட்டனர். இந்நிலையில் சுரேஷின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவதால் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Tags : Bangalore ,Trichy ,bank robbery ,Chennai , 1kg gold rescued , Trichy bank robbery, Chennai, Bangalore
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை