×

ஜெயில் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு குண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி

ஈரோடு: ஜெயில் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மில் தொழிலாளியை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம்  மாலை 4.15 மணிக்கு  செல்போனில்  தொடர்பு கொண்ட மர்ம நபர் ஈரோடு ரயில் நிலையத்திலும், பஸ் ஸ்டாண்டிலும் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும், தனது பெயர் இப்ராஹிம் என்றும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள 4 பிளாட்பாரங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். இறுதியில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதையடுத்து, சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் குறித்து, சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த செல்போன் சிம் கார்டை ஈரோடு கருங்கல்பாளையம் ராயல் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (42) வாங்கி தனது மைத்துனர் லிங்கராஜிடம் (39) தந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் கூலி தொழிலாளிகள்.

போலீசார் விசாரித்தபோது, கடந்த 1ம் தேதி லிங்கராஜ் குடிபோதையில் செல்போனை தவறவிட்டதாக தெரிவித்தார். அந்த செல்போனை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று ஈரோடு ரயில் நிலையத்தில் படுத்து  தூங்கிக் கொண்டிருந்த சந்தோைஷ (41) போலீசார் கைது செய்தனர். இவருக்கு இருமுறை திருமணமாகி உள்ளது. 2 மனைவிகளும் வேறு நபர்களுடன் சென்று விட்டனர். இவர் சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். அந்த வேலை பிடிக்காமல் கடந்த 31ம் தேதி ஈரோடுக்கு வந்தார். சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சுற்றி திரிந்த அவருக்கு லிங்கராஜ் தொலைத்த செல்போன் கையில் கிடைத்துள்ளது. அதை எடுத்து பயன்படுத்தி வந்தார். சாப்பிட வழியில்லாமல் திரிந்த அவருக்கு சிறைக்கு சென்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் குண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Tags : laborer , Jail ,laborer, craves food and bomb
× RELATED தாராபுரம் அருகே டிப்பர் லாரி மோதி...