×

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் : 2 நாளில் புயலாக மாறும்

சென்னை: அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்தம் மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்களில் அது புயலாக மாறும் வாய்ப்புள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  இருப்பினும், அரபிக் கடலில் நிலை கொண்டு இருந்த புயல் சற்றே நகர்ந்து வட மேற்கு திசையில் பயணித்து குஜராத் கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. அதனால், அங்கு பலத்த மழை பெய்து கொண்டு  இருக்கிறது. இந்த புயல் காரணமாக அரபிக் கடல் பகுதியை ஒட்டிய கடலோரப் பகுதியில் உள்ள ஈரப்பதம் முற்றிலுமாக உறிஞ்சப்பட்டதால், வட தமிழகத்தில் மழை குறைந்துள்ளது. அதனால் வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட வெப்ப சலனத்தால்தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று சூளூர், ராஜபாளையம் 60 மிமீ மழை பதிவாகியுள்ளது. பீளமேடு 50மிமீ, சிவகாசி, பாளையங்கோட்டை, கோவை 30மிமீ, புள்ளம்பாடி, நீடாமங்கலம், சங்கரன்கோயில், அவினாசி, பாம்பன், கொடவாசல், திருமயம், தாராபுரம், காமாட்சிபுரம், லால்குடி 20மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதியிலும், வடமேற்கு  அந்தமான பகுதியிலும் புதியதாக ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.  8ம் தேதி புயலாக மாறும் வாய்ப்புள்ளது. பின்னர் அந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து புவனேஸ்வர் அருகே கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. புயல் வலுப்பெறும் போது கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி, அரியலூர், மதுரை, ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.  அந்தமான் பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் இரண்டு நாட்களுக்கு அந்த பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Andaman ,Storm ,New Wind , New wind , Andaman, Storm in 2 days
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...