×

கோயில்களில் பிரசாதம் தயாரிக்க லைசென்ஸ்

* ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும்
* அறநிலையத்துறை ஆணையர் கடிதம்

சென்னை: பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பொருட்கள் தயாரிக்க லைசென்ஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் கோயில் அலுவலர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் பல கோயில்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதேபோன்று, விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் தரப்படுகிறது. மேலும், கோயில் நிர்வாகம் சார்பிலும், சில கோயில்களில் தனியாரிடம் ஒப்பந்தம் விட்டும் பிரசாதம் வழங்க ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கோயில் நிர்வாகம் மற்றும் தனியார் மூலம் வழங்கப்படும் பிரசாதம் மற்றும் பிரசாத ஸ்டால்களில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் தரமானதாக இல்லை என புகார்கள் எழுகின்றன. இந்த புகாரின் பேரில் சில நேரங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். அப்போது பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவை சுத்தமாகவும், பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படுகிறதா, தயார் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள் தரமானதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.  

இந்நிலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்பேரில், பக்தர்களுக்கு பிரசாத பொருட்களை தயாரித்து வழங்கும் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள பிரசாத ஸ்டால்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் பெற வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த கோயில் நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோயில்களில் நேரில் ஆய்வு செய்து அதன்பிறகு சான்று வழங்குவார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த லைசென்ஸ் உணவு பாதுகாப்புத்துறையிடம் புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : temples , License, offerings in temples
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...