×

அரசு பஸ்சில் பயணிகளுக்கு குடிநீர் தாராளமாக கிடைக்க 250 கோடி

* அம்மா குடிநீர் உற்பத்தியை அதிகரிக்க ஒதுக்கீடு
* போக்குவரத்துத்துறை நடவடிக்கை

சென்னை: அம்மா குடிநீர் பாட்டில்களை பஸ் பயணிகளுக்கு தாராளமாக கிடைக்கச் செய்யும் வகையில் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக  250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் தினசரி ஆயிரக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பஸ்களில் பயணம் செய்வோர் குடிநீர் பாட்டில்களை உடன் வாங்கி ெசல்கின்றனர். குறிப்பாக நீண்ட தூரம் பயணம் செய்வோர் 2-4 பாட்டில் வாங்குகின்றனர். இதனால் ஒரு பயணிக்கு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக 150 வரை செலவாகிறது. இதையடுத்து குறைந்த விலையில் போக்குவரத்துக்கழகங்கள் மூலம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக அம்மா குடிநீர் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஒரு லிட்டர் 10க்கு விற்கப்படுகிறது. இது பயணிகளிடத்தில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நீண்ட தூர பஸ்களில் பயணிகளின் சீட்டிற்கே வந்து விற்பனை செய்யும் திட்டமும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த குடிநீரை விநியோகம் செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அம்மா குடிநீர் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நாள்தோறும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, தி.நகர், அண்ணாநகர், பெருங்களத்தூர், அம்பத்தூர், பூந்தமல்லி, வேலூர், திருவொற்றியூர், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர விழுப்புரம், சேலம், திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட இடங்களில் பிரத்தியேக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பயணிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் பாட்டில்களை தொடர்ந்து பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் பஸ்களில் அம்மா வாட்டர் பாட்டில் விநியோகம் செய்வது பொதுமக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து விநியோகம் செய்வதற்காக 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பணிக்கான நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை தரமணியில் உள்ள சாலைபோக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : passengers , 250 crores, provided free of cost, passengers , government bus
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...