×

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு பிரச்னை விஸ்வரூபம் முதல்வர் எடப்பாடியை அழைத்து தமிழக கவர்னர் விளக்கம் கேட்டார்

* டிஜிபி, கமிஷனரும் உடன் இருந்ததால் பரபரப்பு

சென்னை: தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் விஸ்வரூபம் அடைந்துள்ளது. இதையொட்டி முதல்வர் எடப்பாடியை நேரில் அழைத்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று விளக்கம் கேட்டார். அப்போது தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 1ம் தேதி (வெள்ளி) மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினத்தையொட்டி பாஜ சார்பில் வெளியிட்ட முகநூல் பதிவில் திருவள்ளுவர் படத்திற்கு காவி ஆடை உடுத்தி நெற்றி, கைகளில் திருநீர் பூசி இருப்பது போன்று படம் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் அடுத்த பிள்ளையார்பட்டியில் இருந்த திருவள்ளுவர் சிலை மீது நேற்று அதிகாலை சானம் மற்றும் மை வீசி அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டது.

திருவள்ளுவர் சிலை அவமானப்படுத்த சம்பவத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாஜக மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் கொளத்தூர் மணி, மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்த சம்பத்தை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது. வழக்கமாக, தமிழகத்தில் தலைவர்களின் சிலையை அவமதிக்கும் செயல்தான் நடைபெற்றுள்ளது. தற்போது திருவள்ளுவர் சிலையை அவமதித்துள்ள சம்பவம் தமிழ் ஆர்வலர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை 5 மணிக்கு திடீரென சந்தித்து பேசினார். கவர்னரின் அழைப்பின் பேரிலேயே முதல்வர் கிண்டி கவர்னர் மாளிகைக்கு சென்று சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மரியாதை நிமித்தமாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் எடப்பாடி சந்தித்து பேசினார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில், தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சமூக விரோதிகள் அவமானப்படுத்திய சம்பவம் குறித்து விளக்கம் கேட்கவே கவர்னர், முதல்வர் எடப்பாடியை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டார் என்று கூறப்படுகிறது. அதனால்தான் போலீஸ் உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். அப்போது முதல்வர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தமிழக கவர்னர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்திய குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சீன அதிபர் ஜின்பிங் கடந்த மாதம் சென்னை வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுபோன்று, விரைவில் ரஷிய அதிபர் புதினும் விரைவில் மதுரை வரலாம் என்று கூறப்படுகிறது. இப்படி, உலக தலைவர்களின் பார்வை தமிழகத்தின் மீது விழுந்துள்ளதால் இதுபோன்ற சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும் என்று கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags : Thiruvalluvar ,Edappady ,Governor ,Tamil Nadu , Thiruvalluvar Statue, Insulting Issue
× RELATED குமரியில் வள்ளுவர் சிலை- விவேகானந்தர்...