×

சென்னையை அடுத்த பொன்னேரியில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் புதைக்க ஐஓசி நிறுவனத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

* கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு
* உயிரே போனாலும் ஒரு அடி நிலம் கூட எடுக்க விட மாட்டோம் என எச்சரிக்கை

சென்னை: பொன்னேரியில் விளை நிலங்களில் எரிவாயு குழாய் புதைக்க ஐஓசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிரே போனாலும் ஒரு அடி நிலம் கூட எடுக்க விட மாட்டோம் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை-சேலம் இடையே பசுமை  விரைவு சாலை 277 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்க மத்திய அரசு முடிவு  செய்திருந்தது. இந்த சாலையை அமைக்க 8000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர்  வனப்பகுதி மற்றும் 8 மலைகள் அழிக்கப்பட இருந்தது. இதற்கு விவசசாயிகள், சமூக  ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது  தொடர்பாக விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தால் தற்போது இந்த  திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு இந்த  திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து மீஞ்சூர், திருவள்ளூர், பெங்களூர், புதுச்ேசரி, மதுரை வழியாக தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகள், நீர்நிலைகள் ஆகியவற்றை கையகப்படுத்தி பூமிக்கு அடியில் எரிவாயு குழாய் புதைக்கப்பட உள்ளது.  இதனால் சுமார் 6,000 விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நாலூர் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான கருத்து கேட்பு கூட்டம் இந்தியன் ஆயில் நிறுவன நில எடுப்பு பிரிவு அதிகாரி மதுசூதனன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். விவசாயிகள் மட்டும் கலந்து கொண்டனர். அவர்கள் விளை நிலங்களை கையகப்படுத்தி எரிவாயு குழாய் அமைப்பதால் விவசாயம் என்பது முற்றிலுமாக பாதிக்கப்படும். காட்டுப்பள்ளி காளாஞ்சியிலிருந்து புதிதாக அமைக்கப்படும் 300 அடி சிபிபி சாலை வழியாக எரிவாயு குழாயை கொண்டு செல்ல வலியுறுத்தியும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும் மத்திய அரசு விளை நிலங்களை கையகப்படுத்தி எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடாவிட்டால் மாவட்ட அளவில் விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர். ஏற்கனவே விளைநிலங்களில் உயர் கோபுர மின் கம்பிகள் அமைத்ததால் பல விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைத்தால் அந்த குழாய் பதித்து இடத்திலிருந்து சுமார் 60 அடி யாருமே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்றும் கூறினர்.  இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள், ஏழை விவசாயிகள் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். காட்டுப்பள்ளி துறைமுகத்தில்ருந்து மாமல்லபுரம் வரை 300 அடி சாலை செல்லும் சாலை அருகே இந்த குழாய் பதிக்கும் பணி நடந்தால் விவசாய நிலங்கள் பயன்படுத்த படமாட்டாது. விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள் என விளைநில உரிமையாளர்கள் அதிகாரிகளும் கோரிக்கை வைத்தனர்.

மாற்றுப்பாதை அமையுங்கள் விவசாயிகள் பேட்டி

வண்ணிப்பாக்கம் விவசாயி சங்கர் கூறுகையில், “எங்கள் நிலத்தில் அருகே 400 அடி சாலை செல்கிறது. அந்த சாலை ஓரத்திலே கேஸ் பைப் லைன் அமைத்தால் எந்த விவசாய நிலமும் எடுக்க வேண்டிய தேவை இல்லை. அதையே நம்பி வாழும் விவசாயிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதே பணிக்காக கடந்த 2014ம் ஆண்டு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது நாங்கள் திட்டவட்டமாக நிலத்தை கொடுக்க மாட்டோம் என்று முடிவெடுத்து விட்டோம். இனிமேலும் நிலத்தை கொடுக்க மாட்டோம்” என்றார்.

உயிரே போனாலும் ஒரு அடி நிலம் கூட எடுக்க முடியாது

நாலூரை சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் கூறுகையில், “எங்கள் விவசாய நிலத்தில் கேஸ் பைப் லைன் அமைப்பதற்காக எங்கள் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் மூலம் கடிதம் வந்தது. எங்கள் நிலம் அருகே அரசு நிலம் உள்ளது. அந்த நிலத்தில் கேஸ் பைப்பை பதிக்கலாம். அதற்கு பதிலாக விவசாய நிலத்தில் பைப் லைன் அமைப்பது எந்த விதத்தில் நியாயம். எங்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலத்தை விற்பனை செய்ய மாட்டோம். கேஸ் பைப் லைன் அமைக்கவும் விடமாட்டோம். என் உயிரே போனாலும் பரவாயில்லை ஒரு அடி நிலம் கூட என் விவசாய நிலத்தில் இருந்து கொடுக்க மாட்டேன். இதுதான் எனது திட்டவட்ட முடிவாகும்” என்று ஆதங்கத்தோடு தனது கருத்தை தெரிவித்தார்.

Tags : IOC ,Chennai Ponneri ,Farmers protest , Farmers protest, IOC , burying gas pipelines,Ponneri next to Chennai
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஐஓசி...