×

காவி உடை சர்ச்சையை தொடர்ந்து தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : அரசியல் கட்சியினர், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

தஞ்சை: தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசியும், கண்களை கருப்பு  பேப்பரால் மறைத்தும் மர்மநபர்கள் அவமதிப்பு செய்தனர். இதை கண்டித்தும்,  இதற்கு காரணமானவர்களை கைது செய்ய கோரியும் அரசியல் கட்சியினர், மாணவர்கள்,  பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி திருவள்ளுவர்  நகரில் தென்னந்திய வள்ளுவர் சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள், மகளிர் சுய  உதவிக்குழு சார்பில் கடந்த 2005ல் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. இந்த  திருவள்ளுவர் சிலையை அப்போதைய கலெக்டர் வீரசண்முகமணி திறந்து வைத்தார்.  இதைதொடர்ந்து அப்பகுதியினர் திருவள்ளுவர் தினத்தில் மாலை அணிவித்து  மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு  மர்மநபர்கள், திருவள்ளுவர் சிலையின் கண்களில் கருப்பு பேப்பரால் மறைத்தும், முகத்தில் மாட்டு சாணத்தை வீசியும் சென்றுள்ளனர். நேற்று அதிகாலை அந்த  வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல்  சுற்றுவட்டார பகுதியில் பரவியதையடுத்து அங்கு ஏராளமானோர் குவிந்தனர்.  அவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். தகவல் அறிந்து வல்லம்  டிஎஸ்பி சீத்தாராமன் மற்றும் தமிழ் பல்கலைக்கழக போலீசார்  வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, திருவள்ளுவர் சிலையின் மீது  இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவி மாலை அணிவித்தனர்.  தமிழகத்தில்  இதுவரை அரசியல் தலைவர்கள் சிலைகள், பெரியார் சிலையை அவமதிக்கும் செயல்  நடந்து வந்தது. தற்போது உலகத்தில் உள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  திருவள்ளுவர் சிலை மீது மர்மநபர்கள் சாணத்தை வீசி சென்றது உலகம் முழுவதும்  உள்ள தமிழ் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை  கண்டித்தும், மர்மநபர்களை உடனே கைது செய்ய கோரியும் திருவையாறு தொகுதி  எம்எல்ஏவும், தஞ்சை  தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான துரை.சந்திரசேகரன்,  தஞ்சை எம்எல்ஏ  நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்ட செயலாளர்  பாரதி, மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும்  திருவள்ளுவர் பேரவையினர்  திருவள்ளுவர் சிலை அருகே ஒன்று திரண்டனர். சிலையை அவமதித்தவர்களை  கைது செய்யக் கோரி கோஷம்  எழுப்பினர். மாணவர்கள் ஆர்ப் பாட்டம்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை  சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, பல்கலைக்கழக  வாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்கள் கூறுகையில், திருவள்ளுவர் சிலை அவமதிப்பில் பெரிய சதி பின்னணி இருக்கிறது. இது தற்செயலாக நடந்தது இல்லை   என்பது உறுதியாக தெரிகிறது. இந்த சதிக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்றனர்.  இதேபோல் திருவள்ளுவர்  சிலை முன் வள்ளுவர் சங்க மாநில செயலாளர் ஹரிஹரசுதன் தலைமையில் 100க்கும்  மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து திருவள்ளுவர்  சிலை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார்  பாதுகாப்பு பணியில்   ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

4 தனிப்படை அமைப்பு: திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களாக அவமதிப்பு செய்யப்பட்டது தொடர்பாக மத்திய  மண்டல ஐஜி வரதராஜூ, டிஐஜி லோகநாதன், தஞ்சை எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர்  நேற்று மாலை நேரில் ஆய்வு நடத்தினர். பின்னர் ஐஜி வரதராஜூ நிருபர்களிடம்  கூறியதாவது: திருவள்ளுவர் சிலை சேதம் குறித்து பிள்ளையார்பட்டியை சேர்ந்த  கண்ணன் (47) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சை தமிழ்ப்  பல்கலைக்கழக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக வல்லம் டிஎஸ்பி சீத்தாராமன் தலைமையில் 4  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணிக்கு நடுத்தர வயதுடையவர்  அப்பகுதியில் சுற்றி திரிந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.  அந்த நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கு காரணமானவர்களுக்கு 3  ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன்  திருவள்ளுவர் சிலைகள் உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

காவி சர்ச்சைக்குப்பின் அவமதிப்பு

நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினத்தையொட்டி பாஜ சார்பில்  வெளியிட்ட முகநூல் பதிவில் திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை உடுத்தி,  நெற்றி, கைகளில் திருநீர் பூசி இருந்தது. இதற்கு அனைத்து அமைப்புகளும்  கண்டனம் தெரிவித்தது. திருவள்ளுவரை இந்து மத சாயலில் வெளியிட்டதை கண்டித்து  இருந்தனர்.

Tags : Tiruvalluvar ,Thanjavur ,parties ,Kavya Style ,civilians , Statue , Thiruvalluvar , Thanjai
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...