×

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பினாமி பெயரில் சேர்த்த 1600 கோடி சசிகலா சொத்து முடக்கம் : வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பணமதிப்பிழப்பு நடவடிக்கை சமயத்தில், பினாமிகளின் பெயர்களில் வாங்கி குவித்திருந்த ரூ.1600 கோடி மதிப்பிலான 10 கம்பெனிகளை வருமானவரித்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், நெருங்கிய தோழி சகிகலா. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அதிமுக முழுமையாக இவரது கட்டுப்பாட்டில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் ஏற்கனவே எழுந்திருந்தன. அதிமுக ஆளும் கட்சியாக இருந்தேபோது, அமைச்சர்களை மிரட்டி ஒவ்வொரு மாதமும் பணம் வசூலித்து வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஜெயலலிதாவுக்கு மறைமுகமாக வந்த பணம் முழுவதையும் சசிகலாவே வாங்கி வைத்திருந்ததாகவும், அவர்தான் பணம் விவகாரத்தை முழுமையாக கையாண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதிமுகவில் ஜெயலலிதாவை கண்டு பயந்ததை விட சசிகலாவை பார்த்துத்தான் தொண்டர்களும், தலைவர்களும் பயந்தனர். சசிகலா ஆதரவு இருந்தால்தான் அமைச்சராக முடியும், எம்எல்ஏ ஆக முடியும், மாவட்டச் செயலாளராக முடியும் என்ற நிலை இருந்தது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, உலகம் முழுவதும் பல்வேறு சொத்துகளை தன் பெயரிலும், தனது அக்கா மகன்கள், தம்பி என குடும்பத்தினர் பெயர்களிலும் பல்லாயிரம் கோடிக்கணக்கில் வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் கடந்த 1996ம் ஆண்டு வருமானவரித்துறை ஜெயலலிதா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பல வருடங்களாக  நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்தநிலையில் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். இதனைதொடர்ந்து சசிகலா முதல்வராக ஆசைப்பட்டு அதிமுக பொதுசெயலாளராக தன்னை நியமித்து கொண்டார். இதனால் ஓபிஎஸ் சசிகலாவிடம் இருந்து பிரிந்து சென்றார்.

அதனைதொடர்ந்து சசிகலா முதல்வராக பதவியேற்பதற்குள், சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி, சசிகலா மற்றும் இளவரசிக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைதொடர்ந்து, ஜெயலலிதா இறந்துவிட்டதால், சசிகலா, இளவரசி ஆகியோர் சிறைக்கு சென்று தண்டனையை
அனுபவித்து வருகின்றனர். இதற்கு முன்னர் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்துவிட்டு சென்றார். ஆனால் சசிகலா சிறைக்கு சென்ற சில மாதங்களிலையே பிரிந்து கிடந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒன்றாக இணைந்து, முதல்வர், துணை முதல்வர்களாக ஆட்சி நடத்த தொடங்கினர். சசிகலா குடும்பத்தையே அதிமுகவில் இருந்து நீக்கினர். இதனைதொடர்ந்து சசிகலா குடும்பத்தின் கையில் இருந்த அதிகாரங்கள் பறிபோக தொடங்கியது. டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியினை தொடங்கினார். இந்தநிலையில், போயஸ்கார்டன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதில் ஜெயலலிதாவின் அறையில் மட்டும் சோதனை நடத்தவில்லை. வீட்டில் சாவி தொலைந்து விட்டதாக சசிகலாவின் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால், நீதிமன்ற அனுமதியோடு, சசிகலாவுக்கு தெரியாமல் அந்த வீட்டின் பூட்டை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் ஏராளமான நிறுவனங்களின் சொத்து ஆவணங்கள் சிக்கின. இதனால் அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தியபோதுதான் அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தது.

பண மதிப்பிழப்பு நேரத்தில், போயஸ்கார்டனில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து மாற்றச் சொன்னதோடு, அதற்கு ஈடாக அவர்களது சொத்துக்களை தங்கள் பினாமிகளின் பெயருக்கு வாங்கி, ஜெயலலிதாவின் அறையில் ஆவணங்களாக வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு  கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு, சினிமா பானியில் 1200 அதிகாரிகளை தயார் செய்து, சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு, புதுச்சேரி ஆரோவில் உள்ளிட்ட  187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ரூ. 1600 கோடி மதிப்பிலான சொத்துகளை முறைகேடாக வாங்கி குவித்திருப்பதும், வரி ஏய்ப்பு செய்திருப்பதும் தெரியவந்தது. மேலும், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களையும் தங்கள் பெயர்களிலும் வாங்கி குவித்திருந்ததும் அந்த மெகா ரெய்டில் தெரியவந்தது. இந்த ரெய்டு 5 நாட்கள் நடத்தப்பட்டு, நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், சென்னையில் உள்ள கங்கா பவுண்டேசன், கோயம்பத்தூர் செந்தில் பேப்பர் நிறுவனம், பாண்டிச்சேரி ஸ்ரீ லட்சுமி ஜூவல்லரிக்கு சொந்தமான ரிசார்ட் உள்ளிட்ட 10 கம்பெனிகளை பினாமியாக சசிகலா வாங்கி குவித்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனங்கள் வேறு ஒருவர்களின் பெயர்களில் இருந்தாலும், வருமானங்கள் எல்லாம் சசிகலாவிற்கு வந்து கொண்டு இருக்கிறது என்பதை எல்லாம் உறுதி செய்து கொண்ட வருமான வரித்துறை பணமதிப்பிழப்பின் போது, கோடிகளை கொண்டு சசிகலா பினாமிகளில் பெயர்களில் வாங்கி குவித்த இந்த சொத்துகளை முடக்குவதற்கு முடிவு செய்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பினாமி நிறுவனங்கள் இயங்கி வரும் அந்தந்த சார்பதிவாளர்களுக்கும், நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதனைதொடர்ந்து சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி திருத்த சட்டம் 20017ன்கீழ் அனைத்தையும் அதிகாரிகள் அதிரடியாக நீதிமன்றம் மூலம் முடக்கியுள்ளனர். இந்த தகவல் வருமானவரித்துறை வட்டாரத்திலும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த பெரிய அதிர்ச்சி வைத்தியம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : Sasikala ,deflation ,Benami , 1600 crore ,Sasikala property frozen, Benami , defamation action
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது