×

ஆர்.சி.இ.பி.வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு?: எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என பிரதமர் மோடி பேசியதாக தகவல்

பாங்காக்: இந்தியா-ஆசியான் 16-வது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தது. இதில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா  ஆகிய 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு உறுப்பினர்களாக பங்கேற்றனர். இதில் பங்கேற்க, மூன்று நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி வருகை  தந்துள்ளார்.

இந்த மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியான் நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க வேண்டும்.  கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு, வேளாண்மை, இன்ஜினியரிங், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்திய  ஒத்துழைப்புக்கு ஆசியான் நாடுகள் தெரிவிக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்றார்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் மற்றும் ஆர்.சி.இ.பி., ஆலோசனை கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என  தெரியவருகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தில் இணைய இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஒப்ப்நதம் அதன் அசல் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை எனவும் , இதன் விளைவு நியாயமானதாகவோ அல்லது  சீரானதாகவோ இல்லையெனவும் இந்தியா கருதியதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், இதில் இறக்குமதி உயர்வுக்கு எதிரான போதிய பாதுகாப்பு, சீனாவுடனான போதிய வேறுபாடு, அடிப்படை விதிகளை மீறுதல், சந்தை அணுகுதல் மற்றும் கட்டணமில்லா தடைகள் குறித்து நம்பகமான உத்திரவாதங்கள் இல்லாதது,  அடிப்படை ஆண்டாக 2014-ஐ வைத்திருத்தல் போன்ற முக்கிய பிரச்னைகள் உள்ளதாக இந்தியா கருதுகிறது. ஆர்.சி.இ.பி., கூட்டத்தில் பேசிய  பிரதமர் மோடி, ஆர்.சி.இ.பி., ஒப்பந்தத்தை இந்தியர்கள் அனைவரின் நலன்களாக நான்  அளவிடுகிறேன். ஆனால் எனக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே எனது சொந்த மனசாட்சி என்னை இதில் சேர அனுமதிக்கவில்லை. இவ்வாறு பிரதமர் கூறியதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்.சி.இ.பி ஒப்பந்த குழு:

2012ல் உலகின் மிகப்பெரிய இலவச ஒப்பந்த குழுவாக ஆர்.சி.இ.பி., அறிவிப்பு வெளியானது. இதில் ஆசியான் குழுவில் உள்ள 10 நாடுகள் மற்றும் 6 இலவச ஒப்பந்த நாடுகள் இணைய இருந்தன. இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ்,  சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா, இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரியா, நியூசிலாந்து ஆகிய 16 நாடுகளும் இதில் இணைய இருந்தன. இதுதொடர்பாக 29 கூட்டங்கள் இதுவரை  நடத்தப்பட்டன.

ஆர்.சி.இ.பி., குழுவில் இந்தியாவும், சீனாவும் இருந்தால், உலகின் 39 சதவீத ஜி.டி.பி.,யை இந்த 16 நாடுகளும் கொண்டிருக்கும் என்பதால், உலகின் மிகப்பெரிய இலவச வர்த்தக குழுவாக இருக்கும். மேலும் உலக பொருளாதாரத்தில் 49.5  டிரில்லியன் டாலர் இந்த 16 நாடுகளிடம் இருப்பதால், மிகப்பெரும் சக்தி வாயந்த குழுவாக ஆர்.சி.இ.பி., உருவாகும். இந்தியா இதில் இணைந்தால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் என்ற நிலையில், இதில் இணைய இந்தியா மறுப்பு  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi has spoken out that he did not get a favorable answer.
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...