×

தேனி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்

தேனி: தேனி மாவட்டத்தில் இருமடங்கு வேகத்தில் காய்ச்சல் பரவி வருவதால், டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில், மாவட்டத்தில் உள்ள 43 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சராசரியாக தினமும் 30 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து தினமும் 60 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் இருமடங்கு அதிகரித்துள்ளது. காய்ச்சல் நோயாளிகளில் 100க்கு 3 சதவீதம் என்ற அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் கூறியதாவது: காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 3 நாளில் வீடு திரும்பி விடுகின்றனர். சராசரி பாதிப்பில் 3 சதவீதம் பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதை மறுக்க முடியாது. இவர்களுக்கு 5வது நாள் முதல் தினமும் ரத்தபரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுவரை டெங்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கிராமப்பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் தினமும், வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர். பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. பொதுமக்கள் டெங்கு கொசு வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : district ,Theni ,Theni district , Theni district, fast spreading, dengue fever
× RELATED கலெக்டரிடம் கோரிக்கை மனு