×

அணைக்கட்டு தாலுகாவில் அவலம்: கால்நடை மருத்துவமனை திறப்பதில் குளறுபடி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட அணைக்கட்டு, ஊசூர், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா உள்ளிட்ட 4 உள்வட்டங்களில் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இந்த கிராமங்களில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் பசு மற்றும் காளை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை  அதிகளவில் வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க கிராமங்களில் கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகிறது. அதன்படி அணைக்கட்டு தாலுகாவில் உள்ள 65 வருவாய் கிராமங்களில் 30 கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் நோய் பாதிக்கும் தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதிகம் நோய் பாதித்த கால்நடைகளுக்கு டாக்டர்களே வீடுகளுக்கு வந்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் அரசு அறிவிப்பின்படி கால்நடை மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான அரசு மருந்தகங்கள் சரிவர திறப்பதில்லை. ஒரு சில மருந்தகங்களும் காலை நேரங்களில் மட்டும் திறக்கப்படுகிறது. உரிய மருந்துகள், ஊசிகள் இல்லை. இதனால்  உரிய சிகிச்சை பெற முடியவில்லை என விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள், பறவைகளை வளர்ப்போர் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். உரிய சிகிச்சை கிடைக்காமல் கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் போலி டாக்டர்கள் சிலர், பைக்கில் வந்து டாக்டர்கள் எனக்கூறிக்கொண்டு மாடுகளுக்கு சிகிச்சை அளித்து, கால்நடை வளர்ப்போரிடம் அதிகளவில் பணம் பறிக்கின்றனர். அதேபோல் அரசு கால்நடை மருந்தகங்களில் போதிய மருந்துகள் இருப்பு இல்லாததால், தனியார் மெடிக்கல் கடைகளில் மருந்து வாங்கி வரும்படி நிர்பந்திக்கின்றனர்.

குறிப்பாக ஊசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க சுற்று வட்டாரத்திற்கு உட்பட்டு  ஒரே ஒரு அரசு கால்நடை மருந்தகம் உள்ளது. இதில் பணியாற்றும் டாக்டர் மாலை நேரத்தில் வருவதில்லை. இப்பகுதியில் கடந்த ஓராண்டில் உரிய நேரத்தில்  சிகிச்சை கிடைக்காமல் 5க்கும் மேற்பட்ட மாடுகள்  இறந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள், கிராம மக்கள் வேலூர் மாவட்ட கால்நடை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அரசு கால்நடை மருந்தகங்கள் சரிவர திறக்கவேண்டும், அவ்வாறு திறக்கும் மருந்தகங்கள் மாலை வரை இயங்கவும், உரிய மருந்துகள் இருப்பு வைத்து சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : taluk ,Disaster ,Dam ,clinic , Dam, taluk, alas, veterinary hospital, public, indictment
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...