×

ஆவடி மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்: அதிகாரிகளுக்கு விடுமுறை கிடையாது: மழைபாதிப்பை கண்காணிக்க உத்தரவு

ஆவடி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலர் பி.முருகேஷ் ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்றது. ஆவடி தாசில்தார் சரவணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் அதிகாரிகள் வலியுறுத்தியதாவது; வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளவும், பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் ஆவடி தாலுகாவில் 2 இடங்களில் மிக அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாகவும் 7 இடங்கள் அதிக பாதிப்பு பகுதிகளாகவும் ஒரு இடம் மிதமான பாதிப்புக்கு உள்ளாக கூடியதாகவும் 3 இடங்கள் குறைவாக பாதிப்புகளும் கண்டறியப்பட்டுள்ளது.13 இடங்களில் துணை ஆட்சியர் நிலையில் தலைமை அலுவலராக கொண்டு வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, குடிமை பொருள் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, மின்சாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறை போன்ற பல துறை அலுவலர்களை கொண்ட 13 மண்டல குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குழுவில் 127 பெண் மற்றும் 173 ஆண்கள் என 300 முதல் நிலை தகவல் தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி மாவட்டத்தின் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணித்து வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க 23 தற்காலிக முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்திப்பட்டு ஏரி, திருநின்றவூர் ஏரி கொள்ளளவை எட்டி விடுவதை அவ்வப்போது கண்காணித்து உபரி நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 4300 மணல் முட்டைகள்,  3000 கிலோ பிளீச்சிங் பவுடர், மரம் அறுக்கும் எந்திரங்கள், பொக்லைன், ஜெனரேட்டர் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், 24 மணி நேரம் இயங்கக்கூடிய வெள்ள கட்டுப்பாட்டு அறையில் 044- 26554313 என்ற தொலைபேசி எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம். வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிக்கும் எச்சரிக்கை தேவைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி தாலுகாவில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் தங்களது செல்போனை அணைத்து வைக்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி இன்றி விடுப்போ, தலைமை இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகள், மருத்துவமனைகளில் அத்தியாவசிய பொருட்களும் மருந்துகளும், போதிய அளவு இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,  திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர்கள் சங்கர், ஜெயசீலன், துணை தாசில்தார்கள் செந்தில்குமார், மகேஷ் மற்றும் தீயணைப்பு, காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : vacation ,Awadhi Corporation ,Laboratory , Evaporation, Precautions, Laboratory, Rainfall, Monitor, Directive
× RELATED ஆய்வகத்திறன் மேம்பாட்டு பயிற்சி