×

மகாராஷ்ராவில் ஆட்சியமைக்க இழுப்பறி: பால்தாக்கரே உயிரோடு இருந்தால் பாஜக-விற்கு இந்த தைரியம் இருக்குமா?: தேசியவாத காங்கிரஸ் சாடல்

மும்பை: மகாராஷ்ரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பதவிகள் என்ற  கோரிக்கைளை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை ஏற்க பாஜ திட்டவட்டமாக மறுத்து விட்டதால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வருகிறது.ஒருபுறம் சிவசேனாவின் தயவு இல்லாமல், வரும் 7ம் தேதி  சிறுபான்மை அரசாக தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் பதவியேற்க பாஜ ஏற்பாடுகளை செய்து வருகிறது, மறுபுறம் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைக்க சிவசேனாவும் காய்களை நகர்த்தி வருகிறது.

 இந்த நிலையில், 7ம் தேதியன்று தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என்ற பாஜ.வின் அறிவிப்புக்கு போட்டியாக, தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஆதித்ய தாக்கரே முதல்வராக  பதவியேற்பார் என்று சஞ்சய் ராவுத் அறிவித்துள்ளார்.  முதல்வர் பதவி குறித்து பேசுவதாக இருந்தால் மட்டுமே ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜவுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தும். சிவசேனாவில் இருந்து ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். சிவசேனா  ஆட்சியமைக்க 170க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும். எங்கள் அரசின் பதவியேற்பு விழா சிவசேனாவின் கோட்டையாகவும், மராத்தியர்களின் பெருமைக்குரிய சின்னமாகவும், மறைந்த பால் தாக்கரேயின் நினைவிடமாகவும்  விளங்கும் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும். அந்த விழாவில் ஆதித்ய தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்றார்.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைக்கும்பட்சத்தில் அந்த அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சரத் பவாருடன்  ஏற்கனவே சஞ்சய் ராவுத் பேசியுள்ளார். இந்த நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சரத் பவார் சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மருமகனும், கார்ஜத் ஜாம்கெத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ரோகித் ராஜேந்திர பவார் தனது பேஸ்புக் பக்கத்தில், பாஜகவை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். அதில்,  மகாராஷ்டிராவில் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தலைவர்களுள் ஒருவராக மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இருக்கிறார். தேசிய அரசியலில் உயரம் தொட்ட அவரை நான் மதிக்கிறேன். தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் சமபங்கு என  சிவசேனாவுக்கு பாஜக வாக்குறுதி அளித்துவிட்டது. ஆனால், இப்போது அதற்கு எதிராக நடந்து வருகிறது.

பால்தாக்கரே தற்போது உயிரோடு இருந்திருந்தால் பாஜக, இதுபோல் தைரியமாக இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய மோதல்களை பார்க்கும் போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக-சிவசேனா கூட்டணியால் நிலையான ஆட்சி  அமைக்க முடியுமா? என்ற அச்சம் எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : BJP ,Nationalist ,Congress , Will the BJP have the courage if Balthakare is alive ?: Nationalist Congress
× RELATED சொல்லிட்டாங்க…