×

அயோத்தி வழக்கு எதிரொலி: தேவைப்பட்டால் உத்தரப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டம்...மாநில டிஜிபி ஓ.பி.சிங் தகவல்

லக்னோ: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப்பிரதேச  மாநில காவல்துறை டிஜிபி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஒய்வு பெறுகிறார். இன்று முதல்  வரும்8-ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் அலுவலக நாட்கள் முழுமையாக நடைபெறவுள்ளது. அதன் பிறகு 9-ம் தேதி முதல் 12ம் தேதி வரை 4  நாட்கள் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே வரும், 13-ம் தேதி அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் தவறினாலும் 14 அல்லது 15ம் தேதி தீர்ப்பு நிச்சயம் வெளியாகும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை  தொடர்ந்து தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை அளிப்பார்களா? அல்லது மாறுபட்ட தீர்ப்பு வெளியாகுமா? என்று நாடு  முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, அயோத்தி வழக்கில் தீர்ப்பு தேதி நெருங்கி வருவதால் அனைத்து மாநிலங்களும்  பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உளவுத்துறை சார்பில் அனைத்து மாநில காவல்துறைக்கும் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங், எந்தச் சூழ்நிலையிலும் யாரும் சட்டத்தை கையில்  எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால், தேசப் பாதுகாப்புச்  சட்டத்தை அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இச்சட்டத்தின் படி முன்னெச்சரிக்கையாக ஒரு நபரைக் கைது செய்து 12  மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இதனிடையே, கடவுள்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பக் கூடாது என அம்மாநில  அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Ayodhya ,Uttar Pradesh ,State ,DGP OB Singh , Echoing Ayodhya case: National Security Act in Uttar Pradesh if necessary ...
× RELATED இந்தியா கூட்டணிக்கே ராமரின் ஆதரவு: சமாஜ்வாடி கட்சி உறுதி