×

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்த விவகாரத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசிச் சென்ற சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தஞ்சாவூரை அடுத்து வல்லம் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், அதிகாலை 5 மணியளவில் பஞ்சாயத்து யூனியன் அலுவகத்தில் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள் 10க்கும் மேற்பட்டோர் சாணி மற்றும் கருப்புத்துணிகளால் அவமதித்துள்ளனர். நேற்று தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் உள்ளவாறு அமைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் தாய்லாந்தில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று இருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் இன்று அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவமதிப்பு செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இருப்பினும் திருவள்ளுவர் சிலையை அவமதித்த விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில், சிலையை அவமதிப்பு செய்த மர்மநபர்களை கண்டுபிடிக்க ஒரு தனிப்படையை அமைத்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பிள்ளையார்பட்டியில் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என டிஜிபி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், இரு தரப்பினருக்கு மோதல் ஏற்படுத்தும் வகையிலும் இது போன்ற  குற்றச்செயல்களில் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, இதுதொடர்பான வழக்குகளின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,Special Task Force ,Tiruvalluvar ,Tanjore ,statue ,DGP Tripathi ,DGP Tripathy Tanjore , Thanjavur, Thiruvalluvar statue, contempt, marmanaparkal, persons, DGP Tripathi
× RELATED வண்டலூர் அருகே சோகம் கிணற்றில்...