×

அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கு: நவ. 13 முதல் 15ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு

டெல்லி: அயோத்தி நிலச் சர்ச்சை வழக்கில் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீர்ப்பு தேதி நெருங்கி வர இருப்பதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஒய்வு  பெறுகிறார். இன்று முதல் வரும் 8ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தின் அலுவலக நாட்கள் முழுமையாக நடைபெறவுள்ளது. அதன் பிறகு 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 4 நாட்கள் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே 13ம் தேதி அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய தினம் தவறினாலும் 14 அல்லது 15ம் தேதி தீர்ப்பு நிச்சயம் வெளியாகும் என்று உச்சநீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பினை அளிப்பார்களா? அல்லது மாறுபட்ட தீர்ப்பு வெளியாகுமா? என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் வரவேற்று ஏற்றுக்கொள்வதுடன் அமைதி காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு தேதி நெருங்கி வருவதால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உளவுத்துறை சார்பில் அனைத்து மாநில காவல்துறைக்கும் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டு இருக்கிறது.


Tags : Ayodhya , Ayodhya case, Nov. 13 to 15, Judgment, Opportunity
× RELATED கம்பராமாயண நுணுக்கங்கள்