×

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: நவ.4,5-ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதன் பிறகு அரபிக்கடல் பகுதியில் 2 புயல்கள் உருவாகின. அதாவது, கடந்த 24ம் தேதி அரபிக்கடலில் நிலைகொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ‘கியார்’ என்ற தீவிர புயலாக மாறியது. அதனை தொடர்ந்து  கடந்த 27ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் இலட்ச தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டது. இது ‘மகா’ என்ற புதிய புயல் சின்னமாக மாறியது.

இதனால், தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. இரண்டு, மூன்று நாட்கள் மழை பெய்தது. அதன் பிறகு மழையின் அளவு படிப்படியாக குறைந்தது. சென்னையை பொறுத்தவரை கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து விளாசி வருகிறது. தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டியில்; தென் மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவ.4,5-ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். நவ.6,7,8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சூலூர், ராஜபாளையம் - 6 செ.மீ., பிளேடு, ஸ்ரீவில்லிபுத்தூர் - 5 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறினார்.


Tags : Fishermen ,Andaman Sea ,Meteorological Director Fishermen , Southern District, Rain and Weather Center Director
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி...