×

வீதியில் கிடக்கும் முதியோர்களை மீட்டு வாழ்வின் கடைசி நாட்களில் வலியில்லா சேவை

மதுரை: வீதிகளில் கிடக்கும் முதியோர்களை மீட்டு வாழ்வின் கடைசி நாட்களில் வலியில்லா சிகிச்சை சேவையை மதுரையில் 50 நோயாளிகளுக்கு 7 டாக்டர்களை கொண்ட குழு வழங்கி வருகிறது. பெற்ற மகன்கள், மகள்கள் தாய், தந்தையை முதுமையில் கவனிப்பு இல்லாமல் தனியாக தவிக்க விட்டு விடுகின்றனர். சிலர் வீதிகளில் வீசி விட்டு செல்கின்றனர். வீதிக்கு வரும் இவர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் மயக்கத்தில் செய்வது தெரியாமல் தவித்து சாலை விபத்துகளில் சிக்கி, கால், கைகளை இழப்பதும் அதிகரித்து வருகிறது. இவர்களை சில ஆர்வலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். சிகிச்சைக்கு பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் பலர் மீண்டும் வீதிக்கு வந்து விடுகின்றனர். இவர்கள் மீண்டும் உயிருக்கு போராடும் அவலம் தொடர்கிறது.

கடைசி காலத்தில் வீதிகளில் ஆதரவின்றி தவித்து வரும் முதியோர்களை மீட்டு மீண்டும் புத்துயிர் கொடுக்க மதுரையில் 7 டாக்டர்கள் கொண்ட குழு ஐஸ்வர்யம் அறக்கட்டளையால், ‘வலி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு மையம்’ பெயரில் மதுரை மாவட்டம் விளாச்சேரியில் 50 படுக்கை கொண்ட மருத்துவமனையை உருவாக்கி முற்றிலும் இலவசமாக நடத்தி வருகின்றனர். கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும் 50க்கும் மேற்பட்ட முதியோர்களை அரவணைத்து உணவு, உடை, சிகிச்சை என அனைத்து உதவிகளையும் இக்குழுவினர் செய்து வருகின்றனர். இக்குழுவில், டாக்டர்கள் பாலகுருசாமி, அமுதநிலவன், சபரி மணிகண்டன், வித்யா மஞ்சுநாத், அறுவை சிகிச்சை நிபுணர் அருண்குமார், பிசியோ தெரப்பிஸ்ட் ரம்யா, நரம்பியல் நிபுணர் வெங்கடேஷ் ஆகிய 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.

டாக்டர் பாலகுருசாமி கூறும்போது, ‘‘ஆதரவற்ற முதியோர்கள் பலர் வீதிக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு ஏதாவது உதவி செய்யும் நோக்கில் 2014ல் சிறிய அளவில் மருத்துவம் சார்ந்த கிளினிக் துவக்கினோம். பின்னர் ‘பெயின் ரெஸ்கியூ சென்டர்’ என்ற நிலையில், 7 பேர் இணைந்து, மதுரையில் இம்மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். 10 படுக்கைகளுடன் வாடகை கட்டிடத்தில் இயங்கிய சேவை, ஜனார்த்தனன் என்பவர் இலவசமாக வழங்கிய இடத்தில், சொந்த கட்டிடம் கட்டப்பட்டு தற்போது 50 படுக்கைகளுடன் சிகிச்சை தரப்படுகிறது. ரோட்டோரம் கிடப்பவர்களை மீட்டு, சிகிச்சை கொடுத்து நலப்படுத்துகிறோம். உறவினர்களிடமும் ஒப்படைக்கிறோம். ஆதரவற்றவர்களை கடைசி வரை கவனித்து இறப்புக்கு பிறகு நாங்களே காவல்துறை மற்றும் சமூக நலத்துறையுடன் சேர்ந்து இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்கிறோம்’’ என்றார்.

இங்குள்ள செவிலியர்கள் முதியோர்களை தங்கள் பெற்றோர் போல, மலம், ஜலம் துடைத்து, மருந்து, மாத்திரை உணவு வழங்கி பராமரிக்கின்றனர். வீதியில் வீசப்படும் நபர்களை மீட்டு எடுப்பது குறித்து கிராமந்தோறும் விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். முதியோர்களை காக்க மருந்து, மாத்தி ரைகள் மற்றும் உணவு, உடைகள் கொடுக்க தொழிலதிபர்கள், அமைப்பினர்கள் 98940-42747 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளாலம்.

Tags : street ,Retirement , Retirement
× RELATED மெட்ரோ ரயில் சேவை இன்று மாற்றம்