×

பருவமழையால் தக்காளி செடிகள் அழுகின: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தொண்டாமுத்தூர்: கோவைபுறநகர் பகுதிகளான தீத்திபாளையம்,மாதம்பட்டி, ஆறுமுககவுண்டனூர், செல்லப்பகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை கோவை மாவட்டம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான மேற்கண்ட கிராமங்களிலும் நல்ல மழை பெய்தது. பருவமழை விடாமல் பெய்து வருவதால் மானாவாரி தோட்டங்களில் களைகள் அதிகளவில் உருவாகி உள்ளது. மேலும் சாலையோரம் 5 அடி உயரத்திற்கு புதர்கள் வளர்ந்துள்ளது.

இரவு, பகலாக தொடர்ந்த மழையால் தக்காளி பயிரிட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கி நிற்க துவங்கியது. அறுவடை நேரத்தில் பெய்த மழையால் தக்காளி செடிகள் அழுக துவங்கியது. இதுகுறித்து விவசாயி தீத்திபாளையம் பெரியசாமி கூறுகையில், தக்காளி செடிகள் 3 மாதம் முடிந்த நிலையில் இலை மற்றும் காய்களும் அழுக துவங்கியது. தோட்டத்தில் 24 மணிநேரமும் குளம் போல தண்ணீர் தேங்கியதால் தக்காளி செடிகளின் வேர்கள் அழுகத் துவங்கியது. இதனால் செடிகளின் மேல் பகுதியில் உள்ள இலைகள்,காய்களும் அழுகத் துவங்கியது.

தற்போது அறுவடை சீசன் காலத்தில் பருவமழை காரணமாக பழங்களும் அழுகி கிழே விழ துவங்கியது. இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தக்காளி பயிரிட்ட தோட்டங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Tomato plants , Tomato
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை...