×

உயிர்பலி வாங்க காத்திருக்கும் புதுதாராபுரம் ரயில்வே கேட்: பழநியில் வாகன ஓட்டிகள் அவதி

பழநி: புதுதாராபுரம் ரயில்கேட் சாலை சேதமடைந்திருப்பதால் பழநியில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். பழநி-புதுதாராபுரம் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். இச்சாலையின் வழியாக தாராபுரம், சூலூர், சேலம், திருப்பூர், ஈரோடு, வெள்ளக்கோயில் போன்ற ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இச்சாலையையே அதிகளவு பயன்படுத்துவது வழக்கம். இச்சாலை பழநி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது. இங்கு ரயில்வே கேட்டும் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பகல் நேரங்களில் மட்டும் சுமார் 10 முறைக்கு மேல் ரயில்வேகேட் அடைக்கப்பட்டு, திறக்கப்படும். அப்போது சாலையின் இருபுறமும் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்பது வழக்கம்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக பழநி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரும் சட்டபேரவையில் வலியுறுத்தி பேசினார். இதன்பயனாக ரயில்வே மேம்பாலம் அமைப்பதாக அரசு கடந்த 1 வருடத்திற்கு முன்பு அறிவிப்பு வெளியட்டது. தற்போது வரை அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்நிலையில் ரயில்வேகேட் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. தண்டவாளங்கள் மேலே தெரியும்வகையில் சாலைகள் கீழறிங்கி உள்ளன.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலானோர் நாள்தோறும் இச்சாலையை கடக்கும்போது கீழே விழுந்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் தண்டவாளங்களில் உரசி நிற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. இதனை சரிசெய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது: ‘புதுதாராபுரம் சாலை ரயில்வே கேட்டில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தண்டவாளத்தைவிட சாலை கீழே இறங்கி உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாகனங்களின் அடிபாகம் தண்டவாளத்தில் உரசி சேதமடைகிறது. எனவே, அதிகாரிகள் இச்சாலையை துரித கதியில் சீர்செய்ய முன்வர வேண்டும். இதுபோல் திருவள்ளுவர் சாலை, திண்டுக்கல் மெயின்ரோடு சந்திக்கும் பயணிர் விடுதி சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் மாறிவிடுகிறது. வாகன ஓட்டிகள் கீழே விழும் அபாயம் உள்ளதால் இச்சாலையையும் அதிகாரிகள் சீரமைக்க முன்வர வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Railway Gate
× RELATED நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2...