×

ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம்: பிளாஸ்டிக் பயன்படுத்தினால் சிறை

புதுச்சேரி: சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பதை தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இதனை மீறுபவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி,  காரைக்கால், மாகே, ஏனாம் என 4 பிராந்தியங்களை கொண்ட யூனியன்  பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை  கொடுத்து வருகிறது. பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்ட  பகுதியாக இருந்ததால், அழகிய பிரெஞ்சிந்திய கட்டிடக்கலை  அம்சங்களுடன் கூடிய கட்டிடங்கள், இருபுறமும் மரங்கள் கொண்ட நீண்ட நேரான வீதிகள் என தன்னுடைய பழமையான அழகால் எல்லோரையும் தன் வசம் ஈர்க்கிறது.  அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை, மணக்குள விநாயகர் கோயில்,  இருதய ஆண்டவர் கோயில், தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம்,  ஊசுட்டேரி, ஆரோவில் சர்வதேச நகரம் என சுற்றுலா  பயணிகளுக்கு பிடித்த  இடங்கள் ஏராளம் இங்குண்டு.  இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா  பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

நகரத்தில் உள்ள கற்களை கொண்ட கடற்கரைக்கு மாற்றாக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த மணல் கடற்கரையை மீட்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதே நேரத்தில் செயற்கை மணல் பரப்பு  உருவாக்கும் திட்டத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு மணல்பரப்பு  அதிகரிக்கவில்லை. எனவே மற்ற பகுதிகளில் கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்திய  அரசின் சுதேசி தர்ஷன் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் ரூ.70 கோடியில்  காலாப்பட்டு, திப்புராயப்பேட்டை (வம்பாகீரப்பாளையம்), அரிக்கன்மேடு, சின்ன  வீராம்பட்டினம், சுண்ணாம்பாறு, மணப்பட்டு, நரம்பை ஆகிய 7 கடற்கரை பகுதிகளை  மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நீர் விளையாட்டு, பீச் வாலிபால், அரங்கம், ஹோட்டல் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மனதை கொள்ளைகொள்ளும் கடற்கரையென்றால் சின்ன வீராம்பட்டினம் முதல் நோணாங்குப்பம் பாரடைஸ் பீச் வரையிலான பகுதிக்குதான் முதலிடம்,  நீண்ட வெண்மணல் கொண்ட கடற்பரப்பில் காலாற  நடக்கவும், விளையாடி மகிழவும் சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு மற்றும் சுத்தமான  கடற்கரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று ப்ளூபிளாக் (நீலக்கொடி) சான்றிதழுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து 3 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இப்பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி இனிமேல் சுற்றுலாபயணிகள், பார்வையாளர்கள் இந்த பகுதிக்கு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. வீராம்பட்டினத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுண்ணாம்பாறு பாராடைஸ் வரையிலான பகுதி
யில்  பிளாஸ்டிக் பயன்படுத்தவோ, விற்பனையும் செய்யக் கூடாது. குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 பிரிவுப்படி மாவட்ட ஆட்சியர் அருண் இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.  அதன்படி பொதுமக்களுக்கு ஈடன் கடற்கரைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக  மக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் இந்த உத்தரவு கடந்த 8ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதனை மீறுவோர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188 படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாத சிறை தண்டனை, அதிகபட்ச அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.  இது தொடர்பான அறிவிப்பு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் வம்பாகீரப்பாளையம், அரிக்கன் மேடு கடற்கரையிலுக் விரைவில் பிளாஸ்டிக் தடை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

Tags : Jail ,Eden Beach ,Puducherry , Puducherry
× RELATED வேலூர் சிறைக்குள் செல்போன் வீச முயற்சி: போலீசார் விசாரணை