திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தில் 1.50 கிலோ தங்கம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 1.25 கிலோ தங்கம் மீட்பு

திருச்சி: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை போன இரண்டே முக்கால் கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3.25 கிலோ நகை கொள்ளை போன நிலையில் 2.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மறைத்து, உருக்கி வைக்கப்பட்டிருந்த நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். திருச்சி நம்பர்.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி 470 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த அக்.2-ம் தேதி ரூ.13 கோடியே 9 லட்சம் மதிப்பிலான 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், அவரது அக்காள் மகன் சுரேஷ், மதுரை சோழங்கநல்லூர் குருவித்துறை கிராமத்தை சேர்ந்த கணேசன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அடங்கிய கொள்ளை கும்பல் தான் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தார். சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இந்த நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக கணேசன் மற்றும் சுரேஷிடம் சமயபுரம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையின் போது கணேசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் சொகுசு சுற்றுலா வேன் ஒன்றும், 3 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 1½ கிலோ தங்கம் லலிதா ஜூவல்லரியிலும், 1½ கிலோ தங்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடிக்கப்பட்டது ஆகும். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சுரேஷை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கடந்த அக்.29ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுரேஷை திருவாரூர், சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பெங்களூர் மற்றும் சென்னையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை உருக்கி மறைத்து வைத்திருந்ததும், வேறு ஒரு நபரிடம் கொடுத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில், 1.25 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளில் 2.75 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

Tags : Trichy Punjab National Bank Robbery ,jewelery ,Punjab National Bank ,Suresh , Punjab National Bank, Loot, Suresh, Jewelry, Rescue, Trichy, Lalitha Jewelery, Jewelry Loot
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...