×

முத்துப்பேட்டையில் பழுதடைந்து கிடக்கும் ஆர்ஐ கட்டிடத்தால் உயிர் பலி ஏற்படும் அபாயம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை புதுக்காளியம்மன் கோயில் தெருவில் தற்பொழுது பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்து பாழடைந்தநிலையில் ஆர்ஐ கட்டிடம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த கட்டிடத்தில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னாள்வரை இதில் வருவாய்த்துறை அலுவலகம் இயங்கி வந்தது. இதில் முத்துப்பேட்டை நகர மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு சான்றுகள் பெற வந்து செல்ல மிகவும் வசதியாக இருந்தது. நாளைடைவில் இந்த கட்டிடம் பொழிவு இழந்ததால் மழை காலத்தில் மழைநீர் ஒழுகி ஆவணங்கள் சேதமாகியது. இதனை சீரமைத்து தரவேண்டும் அல்லது இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று அப்பொழுதே அப்பகுதி மக்கள் போராடினர். ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் இங்கு இயங்கி வந்த ஆர்ஐ அலுவலகம் எந்தவித வசதியும் இல்லாமல் சற்றுதூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மாடியில் வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதிலும் முதியோர்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மாடி ஏறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

ஆவணங்களை பாதுகாப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்தும் அதிகாரிகள் தரப்பில் ஆர்ஐ அலுவலகத்தை கீழ் புறங்களில் இடம் மாற்றி தரவேண்டும் என்று எடுத்து கூறியும் எந்த பலனும் இல்லை. அதனால் அன்று முதல் இன்றுவரை சுமார் பத்து ஆண்டு மேலாக அதே வாடகை மாடி கட்டிடத்தில்தான் இன்னும் இயக்கி வருகிறது. இந்த நிலையில் பழுதடைந்தநிலையில் பயன்பாட்டில் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கட்டிடம் அதிகளவில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் இருப்பதால் அப்பகுதி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் இந்த கட்டிடத்திற்குள் புகுந்து விளையாடுவதும் ஒளிந்து விளையாடுவதுமாக உள்ளனர். இதில் கட்டிடத்தில் ஏதாவது ஒரு பகுதி இடிந்து விழுந்தாலே உயிர் பலிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும் இதன் கட்டிடத்திற்குள் பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகளவில் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறி வரும் விஷ ஜந்துக்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு தினங்களாக கட்டிடத்திற்குள் நாய்கள் இறந்து கிடைப்பதால் அதிலிருந்து வரும் துர்நாற்றம் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதே போல் இந்த கட்டிடத்தின் உள்புறமும் சுற்று புறமும் குப்பைகள் மற்றும் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதில் தற்பொழுது பெய்து வரும் மழையில் நனைந்து டெங்கு கொசுக்களை உற்பத்தியாக்கி வருகிறது. ஆகையால் இந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய ஆர்ஐ கட்டிடத்தை கட்டவேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட முடியாவிட்டால் இந்த பழுதடைந்த கட்டிடதையாவது இப்பகுதி சிறுவர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நீண்ட பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : building ,RI ,death ,Muthupet , Muthupet
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி