×

மகளிர் குழுக்களை ஊக்கப்படுத்த சண்டே மகளிர் சந்தை துவக்கம்

ஊட்டி: ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மகளிர் குழுக்களின் கைவினை பொருட்களை சந்தைபடுத்தும் வகையில் சண்டே மகளிர் சந்தை (எஸ்எம்எஸ்.,) துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுகளின் கைவினை பொருட்களை சந்தைப்படுத்திடவும், வாழ்வாதாரத்தை உயர்த்திடும் நோக்கில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகளிர் சந்தை அமைக்க திட்டமிடப்பபட்டது.

இதை தொடர்ந்து ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் சண்டே மகளிர் சந்தை துவக்க விழா நேற்று நடந்தது.   இதை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த மகளிர் சந்தையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த குழந்தைகளுக்கான பின்னலாடைகள், சத்துணவு பொருட்கள், இயற்கை உரம் தயாரிக்கும் பொருட்கள், பிளாஸ்டிக், பேப்பர், டயர் போன்ற உபயோகமற்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்த பொருட்கள், ேகாத்தர் பழங்குடியின மக்களின் மண்பாண்ட சிற்பங்கள், தோடர் பழங்குடியின மக்களின் எம்ப்ராய்டரி துணி வகைகள் போன்றவற்றை விற்பனைக்காக வைத்திருந்தனர்.

இவற்றை கலெக்டர் பார்வையிட்டார். தொடர்ந்து அவர் கூறுகையில், மகளிர் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக சண்டே மகளிர் சந்தை துவக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். மகளிர் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவது, பிரபலப்படுத்துவது, முறையாக பேக்கிங் செய்வது குறித்து தெரியப்படுத்த முடியும். மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை வலிமைப்படுத்த உதவும். சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் இடம் என்பதால் இப்பகுதியில் சண்டே மகளிர் சந்தை அமைக்கப்பட்டு உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Women's Market Launch , Women's Market
× RELATED அதிகபட்ச வெப்பத்தில் ஈரோடு 8-வது இடம்