×

19 ஆண்டுகளுக்கு பின் பொய்கை அணை முதல் முறையாக 32 அடியை தாண்டியது

ஆரல்வாய்மொழி: கட்டி முடிக்கப்பட்டு  19 வருடங்களுக்கு பின், பொய்கை அணை 32 அடியை எட்டி உள்ளது. குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு மலையில் இருந்து வரும் மழை வெள்ளம் வீணாகி வந்தது. எனவே வடக்கு மலையில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்கும் வகையில், புதிய அணை கட்ட வேண்டும் என  இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி, இப்பகுதியில் புதிய அணை கட்ட உத்தரவிட்டார். அதன்படி கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு,  2.10.2000 த்தில், இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை மொத்தம் 42.65 அடி கொள்ளளவு கொண்டது. 1,202 மீட்டர் நீளம் உடைய இந்த அணையில் 6.08 ச.கி.மீ. மலைபகுதியும், 1.29 ச.கி.மீ. சமதள பகுதியாகவும் உள்ளது. இந்த அணையின் தண்ணீர் மூலம் சுமார் 1,357 ஏக்கர் விளை நிலங்கள் பயன் பெறுகிறது. இந்த அணையில் ஆற்று மதகு, மேட்டுகால் என இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஆற்று மதகு இரண்டு ஓடையாக பிரிந்து, ஒரு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் செண்பகராமன்புதூர் பெரியகுளத்துக்கும், கரும்பாட்டு குளத்துக்கும் செல்கின்றது. மற்றொரு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் ஆரல்வாய்மொழி பொய்கைகுளம், குட்டிகுளம், பெரியகுளம், வைகைகுளம் என்ற ராமர்குளம், தோவாளை பெரிய குளத்துக்கும் செல்கின்றது. மேட்டுகால் வழியாக செல்லும் தண்ணீர் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகர், முப்பந்தல் வழியாக செல்லும் ஓடை வழியாக அன்னுவத்திகுளம், லெட்சுமி புதுகுளம், அத்திகுளம், மற்றும் ராதாபுரம் தாலுகாவில் உள்ள மேலபாலார், கீழ பாலார், வடக்கு சிவகங்கை, பழவூர் பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு செல்கின்றன.

அணை திறக்கப்பட்டு 19 ஆண்டுகளை கடந்தும், இதுவரை முழு கொள்ளளவை எட்ட வில்லை. கடந்த  1.1.2016 அன்று 30 அடியை தொட்டது. அதன் பின்னர் கடந்த ஓகி புயலின் போது பெய்த கனமழையில் அணை நீர்மட்டம் மைனஸ் 7 அடியில் இருந்து, மூன்று நாட்களில் 29.50 அடியை எட்டியது.  வடக்கு மலையில் இருந்து மழை தண்ணீர் வரும் சுங்கான் ஓடை மற்றும் இறப்பையாறு ஆகியவையின் கரைப்பகுதி உடைந்தும் மண் நிரம்பியும் காணப்படுவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைய தொடங்கியது. இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஓடையையும் சரி செய்த பின்னர்  தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும்  கன மழையில் பொய்கை அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்தது. நேற்று காலை  31.90 அடியை எட்டிய அணை, மதியம் 32 அடியாக உயர்ந்தது. அணைக்கு  தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.   அணை பயன்பாட்டுக்கு வந்ததில் இருந்து சுமார் 19  ஆண்டுக்கு பின், 32  அடியை எட்டியதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து  தண்ணீர் வந்து கொண்டு இருப்பதாலும், மழை நீடிப்பதாலும் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Poygai Dam ,Aralvaymoli , Aralvaymoli
× RELATED ஆரல்வாய்மொழி அருகே மண்ணில் புதைந்த புதிய நான்கு வழிச்சாலை