×

கனமழையால் ‘கண்டமான’ கொடைக்கானல் சாலையில் வெடிவைத்து பாறை அகற்றம்

கொடைக்கானல்: கொடைக்கானல், அடுக்கம் - கும்பக்கரை சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராட்சத பாறை ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல், அடுக்கம் - கும்பக்கரை மலைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பின்னர் சிறுரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்த மழையால், இதே பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து மீண்டும் துண்டிக்கப்பட்டது.  நெடுஞ்சாலை துறையினர் தொடர்ந்து இந்த பகுதியில் முகாமிட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்கம் அருகே சாலையின் மேற்புறத்தில் ராட்சத பாறை ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. இந்த பாறையை வெடி வைத்து உடைக்கும் பணியினை தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலை சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆபத்தான நிலையில் இருந்த ராட்சத பாறை தற்போது வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஓரிரு தினங்களில் முடியும். தற்போது சிறுரக வாகனங்கள் செல்ல ஏற்ற நிலையில் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இந்தப் பகுதியில் போக்குவரத்து இயக்கப்படும்’’ என்றார்.

Tags : rock removal ,road ,Kodaikanal , Kodaikanal, Road
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...