×

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை மீது சாணத்தை வீசி அவமதித்ததால் பரபரப்பு; பொதுமக்கள் போராட்டம்... பல்வேறு கட்சித்தலைவர்கள் கண்டனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணத்தை வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரை அடுத்து வல்லம் செல்லும் வழியில் பிள்ளையார்பட்டி எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், அதிகாலை 5 மணியளவில் பஞ்சாயத்து யூனியன் அலுவகத்தில் அமைத்துள்ள திருவள்ளுவர் சிலையை மர்மநபர்கள் 10க்கும் மேற்பட்டோர் சாணி மற்றும் கருப்புத்துணிகளால் அவமதித்துள்ளனர். நேற்று பாங்காங் தலைநகரில் அந்நாட்டு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் உள்ளவாறு அமைத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். மேலும் தாய்லாந்தில் வெளியிடப்பட்ட புத்தகத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போன்று இருந்தது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலையை அவமதித்த மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன்:

இதுதொடர்பாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், திருவள்ளுவர் சிலை மீது மாட்டுச்சாணத்தை வீசியும், கருப்பு துணி கட்டியும் மிக கேவலமாக முறையில் அவமதித்துள்ளனர். இது திருவள்ளுவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல; ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்ட அவமானம் என்று விமர்சித்தார். இந்த செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் தேசிய பெரியக்கத் தலைவர்:

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய பெரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமம் என்பதால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட காரணமான விஷமிகளை உடனே கண்டறியலாம் என பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலையை அவமதித்த விஷமிகளை உடனே கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்:


திருவள்ளுவருக்கும் , திருக்குறளுக்கும் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் சிலை அவமதித்தவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கொளத்தூர் மணி:

உலக மக்களுக்கு பொதுவான வழிகாட்டியான வள்ளுவரை அவமதிப்புச் செய்தது கண்டனத்திற்குரியது என கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் தழுவிய போராட்டமாக வெடிக்கும் என மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விசிக ரவிக்குமார்:

பாஜகவினர் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி இழிவுபடுத்தியதுதான், இன்று தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்படுவதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கிறது. திருவள்ளுவர் தமிழ் சமூகத்தின் அடையாளம். அவர் தான் தமிழ் மொழியின் குறியீடாக பார்க்கப்படுகிறார். உலகம் முழுவதும் அதிகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலையை அவமதித்திருப்பது கண்டனத்திற்குரிய விஷயம் என அவர் கூறியுள்ளார்.

Tags : Thiruvalluvar ,Thanjavur Civil Struggle ,party leaders ,Sensation of Thanjavur Threw Cow Dung ,Thiruvalluvar Statue , Thiruvalluvar statue, contempt, dung, marmanaparkal, condemned by opposition parties, the public, fight
× RELATED கன்னியாகுமரியில் இருளில் மூழ்கும் திருவள்ளுவர் சிலை