×

இந்திய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு: சட்டப்பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாது என்றும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை மீறியுள்ளதாகவும் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு கடந்த ஆக.5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு மாற்றியமைக்கப்பட்டது. யூனியன் பிரிப்பு கடந்த 31-ம் நள்ளிரவு அமலுக்கு வந்தது. புதிய யூனியன் பிரதேசங்கள் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்களும் 9 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது.

கடந்த 1947ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகியவற்றுடன் இந்தியா முழுவதும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியா வெளியிட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்திய வரைபடத்தில் கில்ஜித் - பாகிஸ்தான் மற்றும் ஆசாத் ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகள் இந்தியாவின் எல்லைக்குள் உள்ளதாக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வரைபடம் தவறானது என்று கூறியுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம்,  இதனை சட்டப்பூர்வமாக ஏற்றுகொள்ள முடியாது எனவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிமுறைகளை இந்தியா அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

Tags : UN ,Indian ,Pakistani ,Security Council , Indian map, Pakistan, protest
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது