×

ஆரணி அருகே சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் விளைநிலம் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் அவலம்: சேற்றில் சிக்கி விழுந்ததால் பரபரப்பு

ஆரணி: ஆரணி, சேத்துப்பட்டு அருகே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், அங்குள்ள விளைநிலம் வழியாக சடலத்தை எடுத்து செல்கின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் அருகே உள்ள ஆலம்பூண்டி ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சடலங்களை அடக்கம் செய்வதற்கு ஒரு கி.மீ. தூரத்தில்  சுடுகாடு அமைந்துள்ளது.இந்த சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால், அங்குள்ள விவசாய நிலங்கள், வயல் வெளிகளில் இறங்கி எடுத்து செல்லும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் கடும்  அவதிப்படுகின்றனர்.எனவே, சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். கிராம சபா கூட்டங்கள், முதல்வரின் சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் புகார்  தெரிவித்தும் பயனில்லை.

இந்நிலையில், ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். அவரது சடலத்தை அங்குள்ள விவசாய நிலம் வழியாக, சேறும், சகதியுமான பாதையில், நெல் வயலில் இறங்கி எடுத்து சென்றனர்.  அப்போது, சடலத்தை தூக்கிச் சென்றவர்கள் சேற்றில் சிக்கியதில், மூதாட்டி சடலம் கீழே விழுந்தது. பின்னர், சடலத்தை எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.இதேபோல், சேத்துப்பட்டு அடுத்த மருத்துவம்பாடி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் இருந்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அங்குள்ள ஏரிக்கரை சாலையை கடந்து, ஓடையில் இறங்கி, வயல்வெளியில் நடந்து சென்று  சடலத்தை அடக்கம் செய்து வருகின்றனர்.இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், `கடந்த 60 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் சேற்றிலும், வயலிலும் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் நிலை உள்ளது. அதிகாரிகளிடம்  பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கிராமத்தில் இருந்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : farmland ,Arani ,Shodakkat ,Auckland Carrying Corridor ,Sudukattu ,Mud , road access, Sudukattu , farmland, mud
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...