×

ரோந்து கப்பலால் மோதி விசைப்படகை சேதப்படுத்தினர் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள், குறைந்தளவு மீன்களுடன் நேற்று கரை திரும்பினர். இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் ராமேஸ்வரம் மீனவரின் விசைப்படகு சேதமடைந்தது.புயல் மழையால் விதிக்கப்பட்ட மீன்பிடி தடை நீங்கியதால் 5 நாட்களுக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று 600க்கும் அதிகமான விசைப்படகுகளில் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். அன்றிரவு மீன்  பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மறித்தனர். பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். பின்னர் அங்கிருந்து மீனவர்களை  விரட்டியடித்தனர்.

இதனால் மீனவர்கள் தங்களது படகுகளை அவசரமாக திருப்பிக் கொண்டு வேறு பகுதிக்குச் சென்றனர். ஆனால், இலங்கை கடற்படையினர் விடாமல் அவர்களை தொடர்ந்து விரட்டினர். இதில் இலங்கை கடற்படை ரோந்து கப்பல், ராமேஸ்வரம்  மீனவர் சந்தியா என்பவரின் விசைப்படகின் பின்பகுதியில் மோதியது. இதில் படகின் பலகை உடைந்து சேதமடைந்தது.இலங்கை கடற்படையின் தொடர் மிரட்டல் நடவடிக்கைகளால் அச்சமடைந்த மீனவர்கள் இரவு முழுவதும் வேறு பகுதிகளில் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். கரை வந்து சேர்ந்த படகுகளில் இறால் மீன்கள் எதிர்பார்த்த  அளவிற்கு இல்லை. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : fishermen ,Sri Lankan ,Rameshwaram ,navy , The patrol car,damaged , wallpaper,Sri Lankan ,naval atrocity
× RELATED இலங்கை சிறையிலிருந்து...