சட்டம் கடுமையானால் பலிகளை தடுக்கலாம்: வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

கடந்த 2012ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த சமயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆழ்துளை கிணறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, புதிதாக 2015ல் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அஜாக்கிரதையாக விட்டாலோ, மூடத்தவறினாலோ, அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கலாம்.  இந்த சட்டத்தின் படி எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்று பார்த்தால் மிகவும் குறைவு. பெரும்பாலும் விவசாய தேவைக்கு ஆழ்துளை கிணறு போடப்படுகிறது;  அதுவும் விவசாயி ஒருவரின் சொந்த இடத்தில் போட்டு அப்படியே விட்டுவிடுகிறார் என்பதால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் விட்டு விடுகின்றனர். ஆனால், இந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து  பாதிக்கப்படும் போது தான் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கிறது.

 ஒரு உயிரிழப்பு வந்தால் தான் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். இந்த சட்டம் 2015ல் வந்ததால் அந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. சட்டத்திலும் ஒரு தெளிவு இல்லை. ஆழ்துளை கிணறு அமைக்கும் போது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பயனற்ற ஆழ்துளை கிணற்றை முறைப்படி மூடி வைக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைத்தால் முறைப்படி அனுமதி பெற வேண்டும். சென்னையில் குடிநீர் வாரியம் போன்று மற்ற இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இதற்கான அனுமதி பெற வேண்டும். ஆனால், சிலர் எந்த அனுமதியும் பெறாமல் ஆழ்துளை கிணறு அமைக்கின்றனர்.

இது போன்று ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டதை கண்காணிக்க நுண்ணறிவு பிரிவு என்று ஒன்று இல்லை. அதனால், யார் அனுமதி வாங்கினார்கள் என்று அவர்களுக்கு தெரியாது. முதலில் உள்ளாட்சி அமைப்புகள் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக தனியாக ஒரு பிரிவை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். ஒரு இடத்தில் போர்வெல் போடும் போது அந்த நிறுவனமும் முறையாக தகவல் தெரிவிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அப்படி செய்தால் ஆழ்துளை கிணறு எங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிணறு என்ன நிலைமையில் உள்ளது என்பதை அவ்வப்போது உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்கும் வகையில் ஆய்வு செய்ய வேண்டும்.ஒரு விபத்து நடந்த பிறகு அந்த விவகாரம் வெளியில் வருகிறது. டெங்கு வரும் போது தான் கொசு ஒழிப்பு பணி குறித்து பேசுகிறோம். அதற்கு முன்னர் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து கொண்டிருந்தால் டெங்கு பரவுவது தடுக்கலாம். ஒவ்வொரு பிரச்சனை வரும் போது தான் அரசே நடவடிக்கை எடுக்கிறது. முதல்வர் எடப்பாடி வீடு முன்பு குப்பை ஏன் எடுக்கவில்லை என்று நீதிபதி கேட்கிறார். அதன்பிறகு அந்த பகுதிகளில் இருந்து குப்பைகள் அகற்றப்படுகிறது.

அது போன்று யாராவது கேள்வி கேட்டால் தான் அரசும் நடவடிக்கை எடுக்கிறது. இது போன்று இல்லாமல் ஆரம்ப கட்டத்தில் நடவடிக்கை எடுத்து இருந்தால் ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு இருக்கும். இனி வருங்காலங்களிலாவது தற்போது உள்ள நடைமுறையில் உள்ள சட்டத்தை கடுமையாக்கினால் மட்டுமே உயிரிழப்புகள் தடுக்க முடியும். மேலும், போர்வெல் நிறுவனங்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அவர்களுக்கான விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்கலாம்.அது போன்று யாராவது கேள்வி கேட்டால் தான் அரசும் நடவடிக்கை எடுக்கிறது. ஆரம்ப கட்டத்தில் நடவடிக்கை எடுத்து இருந்தால் ஆழ்துளைகிணற்றில் குழந்தை விழுந்து உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு இருக்கும்.

Related Stories:

>