×

பிரதமரின் முதன்மை செயலர் அவசர ஆலோசனை டெல்லியில் காற்று மாசு கடும் உயர்வு

* விமான சேவை பாதிப்பு
* பள்ளிகளுக்கு விடுமுறை

புதுடெல்லி: டெல்லி மற்றும் தலைநகர் மண்டலத்தில் காற்றுமாசு மிக கடுமையாக அதிகரித்துள்ளது.டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. அண்டை மாநில விவசாயிகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதால், அதில் இருந்து கிளம்பும் புகை டெல்லி வான் மண்டலத்தை வந்தடைந்து மாசை உருவாக்கி வருகிறது. தொடர் காற்று மாசு காரணமாக, மக்களுக்கு மூச்சுத்திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் முகமூடி அணியாமல் வெளியே வரவேண்டாம் என்று அரசால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், காற்று மாசு கடந்த வெள்ளிக்கிழமையன்று 486 ஆக பதிவானது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதிக்கு பின்னர் இந்த அளவை எட்டியது இதுதான் முதல் முறை. இது அபாய அளவு என்பதால் பொது சுகாதா அவசர நிலை என அறிவித்து டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. எனினும் நேற்று முன்தினம் காற்றின் வேகம் சற்றே அதிகரித்ததன் காரணமாக காற்று மாசு அளவு ஓரளவு குறைந்தது. இதனால் சனிக்கிழமையன்று இரவு காற்று மாசு அளவு 399 ஆக குறைந்தது. ஆனால், இரவு முழுவதும் காற்றின்வேகம் குறைந்ததால் மீண்டும் மாசு அளவு அதிகரித்து நேற்று காலை மீண்டும் 483 என்கிற அபாய அளவை எட்டியது.

இதனிடையே, காற்றுமாசு பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து   பிரதமரின்  முதன்மை செயலாளர் மற்றும் அமைச்சரவை செயலர் ஆகியோர் நேற்று  மாலை உயர்நிலை  ஆலோசனை கூட்டத்தை கூட்டி விவாதித்தனர். அதில், டெல்லி, அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை  சேர்ந்த அரசு பிரதிநிதிகள் வீடியோ மூலம் இணைந்து கலந்து கொண்டனர். இந்நிலையில், காற்று மாசு காரணமாக, தலைநகர் மண்டலத்தில் நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் பகுதிகளில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை வரை  விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் அடர்பனிமூட்டம் காரணமாக, டெல்லியில் தரையிறங்க வேண்டிய 37 விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிடப்பட்டது. காலையில் 10 அடி தூரத்தில் இருக்கும் வாகனங்கள் கூட தெரியாத நிலை இருந்ததால், வாகனங்கள் மெதுவாக இயங்கின. இதேபோல் ரயில்களும் முன்னெச்சரிக்கையுடன் இயக்கப்பட்டன.

Tags : Emergency Consultation , Emergency,Principal Secretary, Prime Minister, Air pollution , Delhi
× RELATED ஆவடி நாசர் எம்எல்ஏ அறிக்கை மத்திய மாவட்ட திமுக அவசர ஆலோசனை கூட்டம்