×

ககன்யான் திட்டத்திற்காக 2 கருவிகளை தருகிறது ரஷ்யா: ஒப்பந்தம் கையெழுத்தானது

புதுடெல்லி: ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு உயிர் காக்கும் உபகரணம் மற்றும் வெப்ப கட்டுப்பாட்டுக் கருவி என 2 முக்கிய கருவிகளை வழங்க ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது.விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இத்திட்டம் ரூ.10,000 கோடியில் வரும் 2021ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது.  இந்நிலையில், ககன்யான் திட்டம் தொடர்பாக கடந்த வாரம் இந்தியா, ரஷ்யா இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.இதன்படி, ககன்யான் விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்களுக்கான உயிர் காக்கும் உபகரணங்களையும், ககன்யான் விண்கலத்தின் வெப்ப கட்டுப்பாட்டு கருவியையும் ரஷ்ய விண்வெளி  ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோசின்  துணை நிறுவனமான கிளவ்கோஸ்மோசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உயிர்காக்கும் உபகரணமானது, விண்வெளியில் வீரர்களுக்கு காற்று, தண்ணீர், உணவு, உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருத்தல் மற்றும் மனித உடலிருந்து  கழிவுகளை வெளியேற்றுதல் போன்ற பணிகளுக்கு பயன்படுகிறது. வெப்ப கட்டுப்பாட்டு கருவியானது, அனைத்து நிலைகளிலும் விண்கலத்தின் வெப்பநிலை அதிகமடையாமல் பாதுகாக்கிறது. அதிக வெப்பமடைந்தால் விண்கலம் வெடித்துச்  சிதறும் அபாயம் உள்ளது.

இத்தகைய உபகரணங்களை ரஷ்யா கடந்த 1960ம் ஆண்டிலிருந்தே தயாரித்து அதிக அனுபவம் பெற்றுள்ளது. எனவே, இதுபோன்ற கருவிகளை தயாரிக்க நேரத்தை செலவிடாமல் ரஷ்யாவிடமிருந்து நேரடியாக பெற இஸ்ரோ முடிவு செய்தது.  ஏற்கனவே, ககன்யான் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிக்கு அளிக்கவும் ரஷ்யா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இத்திட்டத்தை தொடங்கும் முன்பாக, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதமும், 2021 ஜூலையிலும் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மனிதனைப் போன்ற ரோபோ வைத்து அனுப்பப்படும். இத்திட்டம்  வெற்றியடையும் பட்சத்தில் 3 விண்வெளி வீரர்களுடன் ககன்யான் விண்கலம் விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு 5 முதல் 7 நாட்களுக்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் வெற்றியடையும் பட்சத்தில், ரஷ்யா, அமெரிக்கா,  சீனாவுக்கு பிறகு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைக்கும்.



Tags : Russia , Russia , 2 tools,Kaganyan, Agreement signed
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...