×

வாட்ஸ் அப் உளவு விவகாரம் பிரியங்கா செல்போனும் ஹேக் செய்யப்பட்டது: காங். பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரியங்கா காந்தியின் செல்போனும் வாட்ஸ் அப் மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ என்ற நிறுவனம் பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலமாக உலகில் 1400 பேரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்ததாக பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில்,  இந்தியாவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்களும் அடங்குவார்கள். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பாக மே மாதம் இந்த உளவு பார்க்கும் விவகாரம் நடந்திருக்கிறது.  இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேல் ஆகியோர் தங்களின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக அக்கட்சி பரபரப்பு தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்டவர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை தகவல் பிரியங்கா காந்திக்கும் வந்துள்ளது.  2019 மக்களவை தேர்தலுக்காக பாஜ அரசு, இதுபோன்று பொதுமக்கள் மற்றும் அரசியல்  தலைவர்களை வேவு பார்த்திருப்பது அதிர்ச்சி தரும் உண்மையாக இருக்கிறது. இந்த ஸ்பைவேர் பற்றி கடந்த மே மாதமே அரசுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.பெகாசஸ் ஸ்பைவேர் தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் விடுக்கவில்லை என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்  அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நோட்டீசுக்கு பதிலளித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம், கடந்த மே மாதம் முதல் முறையாக அரசுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியதாகவும், பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் 121  இந்தியர்களின் வாட்ஸ் அப் தகவல் உளவு பார்க்கப்படுவதாக 2வது முறையாக எச்சரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. அந்த எச்சரிக்கை தகவல்களில் போதுமான விவரங்கள் இல்லாததால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அரசு  தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற குழுக்கள் விசாரணை
வாட்ஸ் அப் உளவு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தலைமையிலான 2 நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விசாரிக்க முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை நிலைக்குழுவும், சசிதரூர்  தலைமையிலான தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவும் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. வரும் 15ம் தேதி நடக்க உள்ள நிலைக்குழு கூட்டத்தில், வாட்ஸ் அப் உளவு விவகாரம் தொடர்பாக உள்துறை செயலரிடம் விளக்கம் கேட்கப்பட  இருப்பதாக ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். சைபர் பாதுகாப்பு தொடர்பாக அரசிடம் முறையான விளக்கம் கேட்கப்படும் என சசிதரூம் கூறி உள்ளார்.

Tags : Priyanka ,Kong ,spy affair , Whats Up,spy , Priyanka's ,cellphone,Kong.
× RELATED தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது...