×

திருவள்ளுவரை இழிவுபடுத்துவதா?: பாஜவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: திருவள்ளுவரை இழிவுபடுத்தும் பாஜவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆர்.எஸ்.எஸ். பரிவார அமைப்புக்கள் இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்ததையோ, கூட்டாட்சித் தத்துவத்தையோ ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. வரலாறு நெடுகிலும் இத்தகைய  முயற்சிகளை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். தற்போது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நவம்பர் 1 தினத்தையொட்டி வெளியிட்டுள்ள முகநூல் பதிவுகள் இதற்கு சொந்தம் கொண்டாட முயற்சிப்பதோடு, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள  திருவள்ளுவர் படத்தில் திருவள்ளுவருக்கு, காவி உடையும், திருநீர் பூச்சும் அணிவித்து இழிவு செய்திருக்கிறார்கள்.

திருவள்ளுவரை சாதி, மதம், மொழி, தேசிய எல்லை கடந்து உலகம் முழுவதும் பலரும் கொண்டாடி வருகிறார்கள். கடந்த காலத்தில் திருவள்ளுவரை கொண்டாடிய யாரும் அவரை ஒரு அரசியல் இயக்கம் சார்ந்து சித்தரிக்க முயன்றது  கிடையாது. பாஜகவிற்கு சொந்த பெருமிதங்களும், வளமான வரலாறுகளும் எப்போதும் இல்லாத நிலையில் பெருமைக்குரிய ஆளுமைகளை வண்ணம் பூசி, சில அடையாளங்களை மாற்றி தங்களுக்கானவர்களாக சித்தரிக்கும் இந்த முயற்சியை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. திருவள்ளுவரை இழிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.Tags : Thiruvalluvar ,Marxist , Tiruvalluvarai, Marxist condemnation ,Baja
× RELATED இந்த நாள் தேசிய தரச்சான்று பெற்ற அரசு...