ஈரோடு ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல்

ஈரோடு: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, ஈரோடு ஜங்ஷனில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மார்க்கமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திற்கும், வெளிமாநிலத்திற்கும் 80 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட  மர்மநபர்  ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி இணைப்பை துண்டித்தார். உடனடியாக, ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், ரயில்வே போலீசாருக்கும், ரயில்வே பாதுகாப்பு படைக்கும் தகவல்  தெரிவிக்கப்பட்டு, உஷார்படுத்தப்பட்டனர்.

 இதையடுத்து, ஈரோடு ஜங்ஷனுக்கு போலீசார் விரைந்து வந்தனர். மோப்பநாய் கயல் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், பிளாட்பாரங்கள், உணவகங்கள், பயணிகள்  உடமைகள், ரயில்கள் போன்றவற்றில் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர சோதனை நடத்தினர்.   ஆனால், சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவத்தினால் ரயில் பயணிகள் பீதியடைந்தனர். இதுதொடர்பாக ஈரோடு  கருங்கல்பாளையத்தை சேர்ந்த சிவகுமார்(42), இவரது மைத்துனர்  லிங்கராஜ்(39) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.இதற்கிடையில்  தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம், மற்றும் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையங்களுக்கும், தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையம் மற்றும் அங்குள்ள கோயில் களுக்கும் வெடிகுண்டு  மிரட்டல் வந்தது. இதன்காரணமாக அங்கும்  சோதனை நடந்தது.

Related Stories:

>