×

சுகாதாரத்துறையில் தொடரும் உத்தரவுகள் 1,000 டாக்டர்களுக்கு 17பி மெமோ, டிரான்ஸ்பர்: அமைச்சருடன் இன்று டாக்டர்கள் கூட்டமைப்பு சந்திப்பு

சென்னை: சுகாதாரத்துறையில் ஆயிரம் டாக்டர்களுக்கு பணியிடமாறுதல், 17பி மெமோ வழங்கப்பட்டுள்ளதால் இன்று அமைச்சரை சந்திக்க டாக்டர்கள் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1,765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார  நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். 2009ம் ஆண்டு டாக்டர்களின் ஊதிய விகிதம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை  உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம், சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். டாக்டர்கள் தொடர் வேலை  நிறுத்த போராட்டத்தால் பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில்  முதல்வரின் வேண்டுகோளை ஏற்று டாக்டர்கள், 8 நாட்களுக்குபின், நவம்பர் 1ம் தேதி பணிக்கு திரும்பினர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நவ. 1ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘முதல்வரின் உத்தரவுப்படி, அரசால் அறிவிக்கப்பட்டிருந்த  பிரேக் இன் சர்வீஸ் உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. ஏற்கனவே  உறுதியளித்தபடி,  அரசு டாக்டர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும்’’  என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட  டாக்டர்கள் நீங்கலாக பிற டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். அரசு மருத்துவமனைகளில் இயல்பு நிலை  திரும்பியது.இந்நிலையில் 1ம் தேதி, 2ம் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான டாக்டர்களுக்கு இடமாற்ற உத்தரவு, 17 பி மெமோ வழங்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த உத்தரவு தொடரலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், டாக்டர்கள்  பணிக்கு திரும்பி விட்டதால், தங்கள் மீதான பணியிடமாறுதல், 17 பி மெமோ உள்ளிட்டவற்றை திரும்ப பெற வேண்டும் என்பதற்காக இன்று தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக  டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிவிட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு தொடர்ந்து பணியிடமாறுதல் உத்தரவு வந்த  வண்ணம் உள்ளது. ஆயிரம் பேர் வரை 17பி மெமோ, பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அதனால்  தலைமை செயலகத்தில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு செல்ல உள்ளோம். 17 பி ெமமோ, பணியிட மாறுதல் உத்தரவுகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறினர்.

Tags : Doctors ,Minister Minister , Continuing , health sector,Memo , Minister today
× RELATED எல்லா சமூகவிரோதிகளும் இங்குதான்...