×

ஆந்திர மாநில காங்கிரஸ் பார்வையாளராக தமிழக முன்னாள் எம்பி விஸ்வநாதன் நியமனம் : கட்சியை வலுப்படுத்த அதிரடி நடவடிக்கை

சென்னை: ஆந்திர மாநிலம் காங்கிரஸ் பார்வையாளராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்பி விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் காங்கிரசை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக கருத்துக்கணிப்புகளை முறியடிக்கும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து  நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டமாக மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதற்கான பட்டியலை டெல்லி காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு மாநிலத்துக்கும் பார்வையாளர்களாக முன்னாள் எம்பிக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பார்வையாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த காஞ்சிபுரம் தொகுதி முன்னாள் எம்பி விஸ்வநாதன் ஆந்திர மாநில பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பார்வையாளர்கள் அந்த மாநிலத்தில் மோடி அரசுக்கு எதிரான போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்களை முன்னின்று நடத்துவார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும்  கூறப்படுகிறது.



Tags : Viswanathan ,Andhra Pradesh Congress ,party ,observer , observer, Andhra Pradesh ,Congress, Former MP Viswanathan, party
× RELATED வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ₹1.83 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது