×

இருளில் மூழ்கும் ஜிஎன்டி சாலை மின் விளக்குகளை சீரமைப்பதில் மெத்தனம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

புழல்: சென்னை மாதவரம் மேம்பாலம் பகுதியில் இருந்து புழல் ரெட்டேரி, சைக்கிள் ஷாப், கேம்ப், மத்திய சிறைச்சாலை, காவாங்கரை, தண்டல்கழனி, சாமியார் மடம், செங்குன்றம் பைபாஸ் சாலை, திருவள்ளூர் கூட்டு சாலை, எம்.ஏ.நகர், பாடியநல்லூர் சோதனை சாவடி வரை சுமார் 8 கிமீ தூரம் ஜிஎன்டி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் விளக்குகள் பொறுத்தப்பட்டன. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாததால், கடந்த பல மாதங்களாக இந்த மின் விளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதேபோல், இந்த நெடுஞ்சாலையுடன் இணையும் அனைத்து சாலை சந்திப்புகளிலும் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல்களும் முறையாக இயங்குவதில்லை. இதனால் அங்கு சாலையை கடப்பதற்கு பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், ஜிஎன்டி நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. உயிர் பலிகளும் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி, மாதவரம் மேம்பாலத்தில் இருந்து பாடியநல்லூர் சுங்கச்சாவடி வரையுள்ள ஜிஎன்டி சாலையின் இருபக்க சர்வீஸ் சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையை கடப்பதற்கு பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘ஜிஎன்டி சாலையில் உள்ள மின் விளக்குகளை பராமரிக்க ஆண்டுதோறும் அரசு சார்பில் லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை பராமரிப்பு பணிக்காக பயன்படுத்துவதாக கணக்கு காட்டும் அதிகாரிகள், பராமரிப்பு பணியை மட்டும் செய்வது இல்லை. இதன் மூலம் ஆண்டுதோறும் பல லட்சத்தை அதிகாரிகள் சுருட்டுகின்றனர்.

ஜிஎன்டி சாலை இரவில் இருளில் மூழ்குவதால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே, பழுதடைந்த மின் விளக்குகளை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : GNT , GNT Road, Electric Lighting, Alignment
× RELATED புழல் பகுதியில் சர்வீஸ் சாலையில்...