×

கொரட்டூர் அடுக்குமாடி குடியிருப்பில் கால்வாய் அடைப்பால் கிணற்றில் கழிவுநீர் கலப்பு: மக்கள் அவதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் சென்ட்ரல் அவென்யூவில், வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட வஉசி அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள  4 பிளாக்குகளில் 48 குடியிருப்புகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த 35 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு வளாகத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தான் குடியிருப்போர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிணற்றில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் கிணற்று நீரை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  

இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘கொரட்டூர் வஉசி அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி சென்ட்ரல் அவென்யூ  சாலை ஓரத்தில் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் திருட்டுத்தனமாக வீடுகளில் உள்ள கழிவுநீரையும் விட்டு வருகின்றனர். இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்ல முடியாமல் கால்வாயில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்த கால்வாயை ஒட்டி தான் எங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கிணறு அமைந்துள்ளது. தற்போது கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி எங்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள கிணற்றில் கலந்துள்ளது.

இதன் காரணமாக கிணற்று தண்ணீர் முழுவதும் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்புவாசிகள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் வேறுவழியின்றி பயன்படுத்தும் குடியிருப்புவாசிகளுக்கு உடலில் அரிப்பு ஏற்படுகிறது. மேலும், சிலருக்கு தோல் வியாதிகளும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடியிருப்புவாசிகள் கிணற்று நீரை பயன்படுத்த முடியவில்லை. அதற்கு பதிலாக தனியார் லாரிகளில் சப்ளை செய்யப்படும் தண்ணீரை பயன்படுத்துகிறோம். மேலும்,  ஒரு லாரி தண்ணீரை ரூ2 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி வருகிறோம்.

ஒரு வாரத்திற்கு மட்டும் தண்ணீருக்காக ரூ10 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அம்பத்தூர் மண்டல அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இனியாவது அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் கவனித்து கொரட்டூர் வஉசி குடியிருப்பில் உள்ள கிணற்றில் கழிவுநீர் செல்வதை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குடியிருப்போர் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Tags : apartment ,Korattur ,canal block , Korattur, sewage in the well, people's aviary
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...