×

கொள்ளையர்கள் தன்னை கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்றதாக பொய் புகார் அளித்த வாலிபர்: சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

சென்னை: நண்பர்களுடன் நடந்த தகராறில் ஏற்பட்ட காயத்தை மறைப்பதற்காக, கொள்ளையர்கள் தன்னை கத்தியால் குத்தி செல்போன் பறித்து சென்றதாக காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்த வாலிபர், சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார். சென்னை அண்ணாசாலை ரசாக் ஷதர் தெருவை ேசர்ந்தவர் முகமது சுகேஷ் (19). இவர், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘ரிச்சி தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் நான் வேலை செய்கிறேன். நேற்று முன்தினம் இரவு நண்பர் முகமது ஜியாவுதீனுடன் மெரினா கடற்கரைக்கு செல்வதற்காக பைக்கில் எம்எல்ஏ விடுதி வழியாக சென்றேன்.

அப்போது, பைக்கில் முகமூடி அணிந்து வந்த இருவர், எங்களை வழிமறித்தனர். பின்னர் தன்னை கத்தியால் பல இடங்களில் குத்திவிட்டு, எனது செல்போன், ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றுவிட்டனர். காயத்துக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். எனவே, என்னை கத்தியால் குத்தி செல்போன் பறித்த ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் போலீசார், வழிப்பறி நடந்ததாக கூறப்பட்ட எம்எல்ஏ விடுதி அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அப்படி வழிப்பறி எதுவும் நடைபெற வில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து புகார் அளித்த முகமது சுகேஷை அழைத்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ‘‘நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் முகமது சுகேஷ் கத்தியால் காயம்பட்டதும், அதை பெற்றோரிடம் மறைப்பதற்காக, தனது செல்போனை ரிச்சி தெருவில் விற்பனை செய்துவிட்டு, தன்னை வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி செல்போனை பறித்து சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து பொய் புகார் கொடுத்த முகமது சுகேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Plaintiff ,robbers ,CCTV , Lying complaint, plaintiff, CCTV camera
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...