×

டெங்கு என தவறான ரிசல்ட் வழங்கிய ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ரூ46 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டெங்கு காய்ச்சல் என தவறான ரிசல்ட் வழங்கிய  ரத்த பரிசோதனை நிலையத்துக்கு ரூ46 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (31). இவருக்கு கடந்த 3.11.2015 அன்று வாந்தி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஷெனாய் நகரில் உள்ள கார்ப்பரேஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மலேரியா, டைபாய்டு மற்றும் டெங்கு காய்சலுக்கு ரத்த பரிசோதனை செய்ய கூறியுள்ளார். மேலும், டெங்கு காய்சலுக்கு இங்கு பரிசோதனை செய்யும் வசதி கிடையாது.

எனவே தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பரிசோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும், கார்ப்பரேஷன் மருத்துவமனை பரிசோதனையில் டைபாய்டு, மலேரியா காய்ச்சல் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஐயப்பன், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மட்டும் ரத்த பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அங்கு ஐயப்பனுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால், பதறிப்போன அவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கே, மருத்துவர்கள் புதியாக ரத்த பரிசோதனை செய்துள்ளனர். அதில், டெங்கு காய்ச்சல் இல்லை, சாதாரண காய்ச்சல் என்றே கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐயப்பன், தனியார் ரத்த பரிசோதனை மையம் மீது சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு, தனியார் ரத்த பரிசோதனை மையம் வழக்கு செலவு, இழப்பீடு என ரூ46 ஆயிரத்து 894 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Tags : Dengue, False Result, Blood Testing Station, Fines
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...