கத்திவாக்கம் பஜார் தெருவில் டெண்டர் விடப்பட்டு 3 ஆண்டாகியும் கிடப்பில் மீன் மார்க்கெட் கட்டும் பணி: வியாபாரிகள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் கத்திவாக்கத்தில் ரூ2.20 கோடி செலவில் புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட கத்திவாக்கம் பஜார் தெருவில் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களுக்கு தேவையான மீன் மற்றும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த மார்க்கெட் போதிய அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. சிமென்ட் மேற்கூரைகள் சேதமடைந்து பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.

மேலும் போதிய இடவசதி இல்லாததால் மீன் வியாபாரிகள் திறந்தவெளியில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும் இங்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதியும் இல்லை. கழிவுநீர் வெளியே செல்வதற்கு எந்த வசதியும் இல்லாததால் அங்கேயே குளம்போல் தேங்குகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே இந்த மார்க்கெட்டை புதுப்பித்து நவீனமாக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ரூ2.20 கோடி செலவில் குடிநீர், கழிவறை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மார்க்கெட் கட்டிடம் கட்ட கடந்த 2016ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. ஆனால், மூன்றாண்டு ஆகியும் அந்த பணி இதுவரை துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்த மீன் மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து துவங்க வேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

தற்போது இந்த மார்க்கெட் மேற்கூரை பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் சற்று வேகமாக காற்றடித்தால் இடிந்து விழுந்து விடுமோ என்று வியாபாரிகளும் பொதுமக்களும் பீதி  அடைந்துள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மார்க்கெட் கட்டுமான பணியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நிதி தாமதம்

கத்திவாக்கம் மீன் மார்க்கெட்  கட்டுமான பணிக்கு மத்திய மீன்வள மேம்பாட்டு கழகம் சார்பில் 40% நிதியும், தமிழக மீன்வளத்துறை சார்பில் 60% நிதியும் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி கட்டுமான பிரிவு திட்டமிட்டது. ஆனால் சம்மந்தப்பட்ட துறையிலிருந்து முறையாக நிதி வராததால் கட்டுமான பணி தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Related Stories:

>