×

பல்லாவரம் நகராட்சியில் அமைக்கப்பட்ட புதிய சாலை 5 மாதங்களில் சிதிலமடைந்த அவலம்: தரமற்ற பணியே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்: பல்லாவரம் நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலை 5 மாதங்களில் சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. தரமற்ற பணியே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள திருமலை நகர் முதல் பிரதான சாலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், கடைகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன. குரோம்பேட்டையில் இருந்து அஸ்தினாபுரம் வழியாக செம்பாக்கம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கு செல்பவர்களும், செம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளுக்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருவதால், போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த சாலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிகள் தொடங்கி நடைபெற்றது. பின்னர் அந்த பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்டு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் பாதாளசாக்கடை அமைப்பதற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கப்பட்டது.

துவங்கப்பட்ட நாளில் இருந்து பணிகள் சரிவர நடைபெறாமல் ஆமைவேகத்தில் நடைபெற்றது. இதையடுத்து, அங்கு இரவோடு இரவாக தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால், சில மாதத்திலேயே சேதமடைந்துள்ளது. மேலும் சாலையிலுள்ள பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை பள்ளங்களை சீரமைக்காத நகராட்சி அதிகாரிகள் கட்டிட கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : road ,municipality ,Pallavaram , Pallavaram Municipality, New Road
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...