×

சிவாஜி பார்க் மைதானத்தில் ஆதித்ய தாக்கரே முதல்வராக பதவியேற்பார் சிவசேனாவுக்கு 170 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு: சஞ்சய் ராவுத் பரபரப்பு பேட்டி

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க 170க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஆதித்ய தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்றும் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவுத் கூறினார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தாலும், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பதவிகள் என்ற கோரிக்கைளை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கையை ஏற்க பாஜ திட்டவட்டமாக மறுத்து விட்டதால் புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடித்து வருகிறது.ஒருபுறம் சிவசேனாவின் தயவு இல்லாமல், வரும் 7ம் தேதி சிறுபான்மை அரசாக தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் பதவியேற்க பாஜ ஏற்பாடுகளை செய்து வருகிறது, மறுபுறம் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் புதிய அரசு அமைக்க சிவசேனாவும் காய்களை நகர்த்தி வருகிறது. இந்த நிலையில், 7ம் தேதியன்று தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் புதிய அரசு பதவியேற்கும் என்ற பாஜ.வின் அறிவிப்புக்கு போட்டியாக, தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் விழாவில் ஆதித்ய தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்று சஞ்சய் ராவுத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: முதல்வர் பதவி குறித்து பேசுவதாக இருந்தால் மட்டுமே ஆட்சியமைப்பது தொடர்பாக பாஜவுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தும். சிவசேனாவில் இருந்து ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். சிவசேனா ஆட்சியமைக்க 170க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைக்கும். எங்கள் அரசின் பதவியேற்பு விழா சிவசேனாவின் கோட்டையாகவும், மராத்தியர்களின் பெருமைக்குரிய சின்னமாகவும், மறைந்த பால் தாக்கரேயின் நினைவிடமாகவும் விளங்கும் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும். அந்த விழாவில் ஆதித்ய தாக்கரே முதல்வராக பதவியேற்பார்.பாஜ தலைவர் அமித்ஷாவும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் நேரில் சந்தித்து பேசினால் இப்போதைய இழுபறி நிலைக்கு தீர்வு காணமுடியும். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு புதிய ஆட்சி அமைப்பது தொடர்பான பிரச்னையில் அமித்ஷா தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

பாஜ ஆட்சியமைப்பதற்காக மற்ற கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற கிரிமினல் பேர்வழிகள் மற்றும் சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அரசு ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, சிவசேனாவுடன் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க, புதிய பார்முலாவை அக்கட்சி முன்பு பாஜ பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது,  சிவசேனாவுக்கு முதல்வர் பதவியுடன் மகாராஷ்டிரா அமைச்சரவையில் சமபங்கு மற்றும் மத்திய அமைச்சரவையில் கூடுதலாக ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஒரு இணையமைச்சர் பதவியும் வழங்க தயாராக இருப்பதாக பாஜ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று சோனியா-பவார் சந்திப்பு
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து சிவசேனா ஆட்சியமைக்கும்பட்சத்தில் அந்த அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சரத் பவாருடன் ஏற்கனவே சஞ்சய் ராவுத் பேசியுள்ளார். இந்த நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சரத் பவார் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்புக்கு பிறகுதான் சிவசேனா தலைமையில் புதிய அரசு அமைய காங்கிரஸ் ஆதரவளிக்குமா என்பது திட்டவட்டமாக தெரியவரக்கூடும் என கூறப்படுகிறது.

Tags : Shivaji Park ,Shiv Sena ,Aditya Thackeray ,stalwart ,170 MLAs , 170 MLAs, support Shiv Sena, Aditya Thackeray,sworn , Shivaji Park
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை