×

இந்தியா-ஆசியான் நாடுகள் இடையே வர்த்தக உறவை விரிவாக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

பாங்காக்: இந்தியா- தென்கிழக்கு ஆசிய நாடுகள்(ஆசியான்) இடையே வர்த்தகத்தை விரிவுபடுத்தும் திட்டம் குறித்து இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசினார். இந்தியா-ஆசியான் 16வது உச்சி மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நேற்று நடந்தது. இதில் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர் மற்றும் கம்போடியா ஆகிய 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு உறுப்பினர்களாக பங்கேற்றனர். இந்த மாநாட்டில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியான் நாடுகள் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத்து இணைப்பை அதிகரிக்க வேண்டும். கடல்சார் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு, வேளாண்மை, இன்ஜினியரிங், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.  இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கு ஆசியான் நாடுகள் தெரிவிக்கும் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தோ-பசிபிக் எதிர்கால பார்வையில், இந்தியாவின் கிழக்கு கொள்கை மிக முக்கியமானது. ஒருங்கிணைந்த மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் ஆசியானை உருவாக்குவதுதான் இந்தியாவின் விருப்பம்.  இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டுக்கு இடையே இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தீவிரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதில் இணைந்து செயல்பட இரு தலைவர்களும் தீர்மானித்தனர்.தாய்லாந்து பிரதமர் பிரயுட் சான்-ஓ-சாவை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்பு துறை மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியா-தாய்லாந்து இடையே கடந்தாண்டு நடந்த வர்த்தகம் 20 சதவீதம் அதிகரித்துள்ளதை வரவேற்பதாகவும், வர்த்தகம், முதலீட்டை மேலும் அதிகரிக்க இருநாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு
தாய்லாந்தில் நடந்த ஆதித்யா பிர்லா குரூப் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு தாய்லாந்து தொழிலதிபர்கள் இடையே பிரதமர் மோடி பேசியதாவது:இந்தியாவில் தற்போதைய வரிவிதிப்பு, மக்களுக்கு சாதகமான முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம். ஊழல் எல்லாம் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எல்லாம் முதலீடு செய்வதற்கு சிறந்த நாடாக இந்தியாவை மாற்றியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 286 பில்லியன் அமெரிக்க டாலர் (₹20 லட்சம் கோடி) அன்னிய முதலீடு பெற்றுள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் அன்னிய முதலீட்டு மதிப்பில் பாதி அளவு.  எனது அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றபோது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) ₹141 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் இதை ₹211 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : India ,ASEAN , India, expand trade, ties between ASEAN, PM Modi
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!